Saturday, April 20, 2013

அம்பேத்கரியம் சாதித்தது என்ன?


‘‘புதிய ஜனநாயகம்” 2012 செப்டம்பர் இதழில் தாழ்த்தப்பட்ட மக்கள் வேண்டுவது சீர்த்திருத்தமா? புரட்சியா?” என்ற கேள்வியை எழுப்பும் நீண்ட கட்டுரை வெளியிடப்பட்டிருந்தது. அதில், பல எடுத்துக்காட்டுகளுடன் சில முடிவுகளும் கேள்விகளும் முன்வைக்கப்பட்டிருந்தன. அவற்றின் தொகுப்பு பின்வருமாறு:
  • Žஇதுவரை இத்தனை ஆண்டுகளாகத் தாழ்த்தப்பட்ட மக்களுக்காக அரசு மேற்கொண்ட சமூக நீதிக்கான இடஒதுக்கீடுகளும், தீண்டாமை-வன்கொடுமைத் தடுப்பு மற்றும் பாதுகாப்புச் சட்டங்களும், வளர்ச்சி-முன்னேற்றத்துக்கான திட்டங்களும் நிதி ஒதுக்கீடுகளும் இம்மக்கள் வாழ்வில், சமூகத்தில் பாரிய மாற்றங்களைக் கொண்டு வந்துவிடவில்லை. மாறாக, இத்தகைய முயற்சிகள் மூலம் சாதிய சமத்துவத்தை ஒருக்காலும் ஏற்படுத்தி விட முடியாது என்பதையே நாளும் பெருகிவரும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான வன்கொடுமைத் தாக்குதல்கள் திரும்பத் திரும்பக் காட்டுகின்றன.
  • Žஆங்கிலேயக் காலனியவாதிகளால் கட்டியெழுப்பப்பட்டு, காந்தி-நேரு-காங்கிரசினால் வரித்துக் கொள்ளப்பட்ட இந்திய அரசுக் கட்டமைப்பு என்பது சாதிய சமுதாய அமைப்பு குலைந்து போகாமல் காப்பதற்கானதுதான். இதன் அங்கங்களான அதிகார வர்க்கம், இராணுவம், போலீசு, நீதிமன்றங்கள் எல்லாம் சாதிய சமுதாய அமைப்பைக் கட்டிக் காப்பதற்காக உள்ளவைதாம்.இந்த நேக்கத்துக்காகவே போதனையும் பயிற்சியும் அளித்து வளர்க்கப்பட்ட மேற்படி அரசு அமைப்பினரே ஒரு தனிவகை சாதியினர். சமத்துவத்தையோ, ஜனநாயகத்தையோ இந்தத் தனிவகைச் சாதிய அமைப்பு ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாது. இத்தகைய அரசு அமைப்பை, தனிவகைச் சாதியினை தாக்கித் தகர்த்து விட்டு, தமக்கென ஒரு புதிய அரசுக் கட்டுமானத்தை நிறுவிக் கொள்வதுதான் அரசியல் புரட்சி; இவ்வாறான அரசியல் புரட்சி ஒன்றின்றி சமூகப் புரட்சி சாத்தியமே கிடையாது. இப்போதுள்ள அரசுக் கட்டுமான அமைப்பை அப்படியே தக்க வைத்துக் கொண்டு ஒடுக்கப்படும் சாதியினர் தமது நலன்களுக்கான சமத்துவம், ஜனநாயகம், சமூக நீதியை நிறுவுவதற்குப் பயன்படுத்திக் கொள்ள முடியாது.
  • பெரியார், அம்பேத்கர் முதலியவர்களுக்கு எவ்வளவுதான் நேர்மையான, உயரிய நோக்கங்கள் இருந்தபோதும் அவர்கள் முன்வைத்த தீர்வுகள் இந்தக் கட்டமைவைத் தகர்த்து, புதிய கட்டுமானத்தை நிறுவுவதற்கான புரட்சிகர உள்ளடக்கத்தையும் வழிமுறைகளையும் கொண்டவையாக இல்லை. மார்க்சிய ஆசான்களாலேயே முன்வைக்கப்படாத, உலகில் வேறெங்கும் இல்லாத தனிச்சிறப்பான சாதியாதிக்க சமூகத்தைக் கொண்டது இந்திய நாடு, என்கிற பேருண்மையைப் பெரியாரும் அம்பேத்கரும் மட்டுமே கண்டுபிடித்து விட்டதாக அம்பேத்கரிய, பெரியாரியவாதிகளால் உரிமை பாராட்டப்படுகிறது. ஆனால், அச்சாதி ஆதிக்க சமூகத்தைத் தகர்க்கவும், சமத்துவ, ஜனநாயக சமுதாயத்தை உருவாக்கவும் கூடிய, உலகில் வேறெங்கும் இல்லாத தனிச் சிறப்பான, புரட்சிகரமான தீர்வுகளையும் வழிமுறைகளையும் அவர்கள் முன்வைத்துள்ளார்களா?
  • அடுக்கடுக்கான படிநிலை சாதிய சமுதாயத்தில்  சாதி இந்துக்களுக்கு மட்டுமே சாதி ஆதிக்கமும் அதிகாரமும் உள்ளது. அவை பலவீனமடைவதாக உணரும்போதெல்லாம் ஆதிக்க சாதிகள் புதுப்புது நடைமுறைகள் மூலம் மீண்டும் தமது அதிகாரத்தையும் ஆதிக்கத்தையும் நிலைநிறுத்திக் கொள்கிறார்கள். ஆகவே, வேண்டுவது மேலும் மேலும் சீர்திருத்தங்கள் அல்ல! கெட்டி தட்டிப் போயிருக்கும் சாதியாதிக்க சமுதாயத்தை உலுக்கித் தலைகீழாகப் புரட்டிப் போடும், உழைக்கும் மக்கள் தலைமையிலான சமூக அரசியல் புரட்சி! தலித்” தலைவர்களும் அமைப்புகளும் அத்தகைய புரட்சிக்குத்தான் பணியாற்றுகிறார்களா?தாழ்த்தப்பட்ட மக்களின் சமூக மற்றும் அரசியல் நிலைமை, சாதிய ஒடுக்குமுறை பற்றி இங்கே தொகுக்கப்பட்டிருக்கும் எடுத்துக்காட்டுகள், தமிழ்நாட்டில் உள்ளவை மட்டும்தாம். நாட்டின் பிற மாநிலங்களில், குறிப்பாக அரியானா, பீகார், முன்னாள் உ.பி. மற்றும் முன்னாள் ம.பி., ஒரிசா, மராட்டியம், கர்நாடகம் மற்றும் ஆந்திராவில் உள்ள நிலைமைகளோ படுமோசமானவை.ஆகவே, நாட்டிலுள்ள தலித் அரசியல் கட்சிகளும், தலித் விடுதலை இயக்கங்களும், தலித் அறிவுஜீவிகளும் உடனடியாகச் செய்ய வேண்டியது ஒன்றுண்டு. தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இழைக்கப்படும் தீண்டாமை, வன்கொடுமைகளை முறியடிப்பதற்கும், சமூக விடுதலைக்கும் அம்பேத்கர் காலந்தொட்டு இதுவரை, இவ்வளவு காலமாக மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் ஏற்படுத்தியுள்ள விளைவுகளைத் தொகுத்தறிய வேண்டியுள்ளது. சுயதிருப்தியை உதறிவிட்டு சுயபரிசீலனை செய்ய வேண்டியுள்ளது.
அம்பேத்கர் புனா ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதைப்போல சித்தரிக்கும் ஓவியம்
அம்பேத்கர் புனா ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதைப்போல சித்தரிக்கும் ஓவியம்
ஓட்டுக் கட்சி அரசியலில் குதித்து சந்தர்ப்பவாத அரசியல் கூட்டுகள் அமைத்துக் கொண்டு, தாழ்த்தப்பட்ட ஆதிக்கச் சாதிகளுக்கும் ஆளும் வர்க்கங்களுக்கும் விசுவாசமாக நடந்து கொண்டு, மக்களுக்குத் துரோகமிழைத்தும் கருங்காலித்தனம் செய்தும் ஒரு சில தனிநபர்கள் குடியரசுத் தலைவர், துணைத் தலைவர், துணைப் பிரதமர், மத்திய-மாநில அமைச்சர் பதவிகளைக் கைப்பற்ற முடிந்தது. இடஒதுக்கீடு மூலம் அரசுப் பதவிகளைப் பிடித்து, அதிகார வர்க்கம்-போலீசின் உயர்ந்த பதவிகளையும்கூட ஒரு சிலர் பிடிக்க முடிந்தது. (அவர்களிலும் மாயாவதி, ராம்விலாஸ் பசுவான், முத்துக்கருப்பன் போன்ற ஒரு சிலர்  கோடீசுவரர்களாகவும் முடிந்தது.) தாழ்த்தப்பட்ட மக்கள் தொகையில் இத்தகையவர்கள் ஒரு சதவீதத்தினர் கூட கிடையாது. அதேசமயம், இப்படி உயர்ந்தவர்கள்கூட ஆதிக்க சாதியினருக்குச் சமமான சமூக மதிப்பைப் பெற்றுவிட முடியவில்லை. துணைப் பிரதமராக இருந்த ஜெகஜீவன்ராம் முதல் மத்திய அமைச்சராக இருந்த தென்காசி அருணாச்சலம் வரை சாதி அடிப்படையில் இழிவுபடுத்தப்பட்டிருக்கின்றனர்.
ஆனால், தீண்டத்தகாதவர்களாக ஒதுக்கி வைக்கப்பட்டு, அதிகரித்த அளவில் வன்கொடுமைத் தாக்குதல்களுக்கு இலக்காகி வரும் தாழ்த்தப்பட்ட மக்கள் ஒரு சமூகம் என்ற முறையில் சமத்துவம், விடுதலை என்பதை நோக்கி ஒரு சிறு அளவுகூட முன்னேறி விடவில்லை.  அம்பேத்கரால் முன்வைக்கப்பட்ட தலித்-சூத்திரக் கூட்டு என்ற பகுஜன் சமாஜ் வழியில் நாட்டிலேயே பெரிய மாநிலமான உத்திரப்பிரதேசத்தில் முதன்முறையாக தலித் முதலமைச்சரானார், மாயாவதி. அவர் ஆட்சியில்கூடத் தாழ்த்தப்பட்ட  மக்களுக்கு எதிரான வன்கொடுமைகள் தடுத்து நிறுத்தப்படவில்லை; முன்னைவிடப் பெருகித்தான் வந்துள்ளன.
அதற்குக் காரணம், பத்து மாநிலங்களில் கால் பதித்துள்ள பகுஜன் சமாஜ் கட்சியின் மாயாவதி, ராம்விலாஸ் பசுவான், அம்பேத்கரின் பேரன் பிரகாஷ் அம்பேத்கர், அதாவாலே, திருமாவளவன், கிருஷ்ணசாமி போன்ற தலித் தலைவர்கள் ஓட்டுக் கட்சி அரசியலில் புகுந்து சீரழிந்து போய் விட்டார்கள்; அம்பேத்கரின் தத்துவத்தையும் வழிமுறைகளையும் புரிந்து கொள்ளவுமில்லை; பற்றி  நிற்கவும் இல்லை-என்று நாடாளுமன்ற அரசியலுக்கு வெளியே சிந்திக்கும் காஞ்சயிலைய்யா, ஆனந்த் தெல்தும்டே போன்ற இன்றைய தலித் சிந்தனையாளர்களும் அறிவுஜீவிகளும் வாதிடுகிறார்கள்.
உண்மையில், தலித் அரசியல் தலைவர்கள் அம்பேத்கரைத் தமது சமூக மற்றும் அரசியல் குறியீடாகவும் அடையாளமாகவும் கருதுகின்றனர். அம்பேத்கரை வழிபாட்டுக்குரிய ஒரு அரசியல் தெய்வமாகவே முன்வைக்கின்றனர்.  அவரது தத்துவம் மற்றும் வழிமுறைகள் மீதான விமர்சனப்பூர்வ ஆய்வுகள், மதிப்பீடுகள் எதையும் தாழ்த்தப்பட்ட சமூகம் முழுமைக்கும் எதிரான தாக்குதல்களாகவே சித்தரிக்கின்றனர். அம்பேத்கரின் சிலைகளை அவமரியாதை செய்யும் சாதி இந்துக்களை வெறுப்பதைப் போல அம்பேத்கரின் கருத்துக்களை விமர்சிப்பவர்களை வெறுக்கிறார்கள். திருமாவளவன் போன்ற தலித் தலைவர்களுக்கு எதிரான விமர்சனங்கள்கூட இதற்கு நிகராகவே வெறுக்கப்படுகின்றன.
விடுதலைப் புலித் தலைவர் பிரபாகரனை விமர்சிப்பவர்கள் மட்டுமல்ல; அவர் கொல்லப்பட்டு விட்டார் என்ற உண்மையைச் சொல்பவர்கள் தமிழினத் துரோகிகள் என்று முத்திரை குத்தப்படுகிறார்கள். திருமாவளவனின் குறைபாடுகள், சந்தர்ப்பவாதங்களை எடுத்துரைப்பவர்கள் தலித் எதிரிகள் என்று சித்தரித்துத் தாக்கப்படுகிறார்கள். இந்தச் சூழலில் அம்பேத்கரியம் பற்றிய விமர்சனப்பூர்வமான மதிப்பீடுகள் எவ்வாறு சித்தரிக்கப்படும் என்று சொல்ல வேண்டியதில்லை! என்றாலும், அப்பணி இன்றைய நிலையில் அவசியமாக உள்ளது.
தீண்டாமை மற்றும் சாதியக் கட்டமைப்புக்கு எதிராக அம்பேத்கரின் பங்களிப்புகளை சாரமாகத் தொகுத்துச் சொல்வதற்குப் பதிலாக, அவர் விமர்சனத்திற்கு அப்பாற்பட்ட மாமேதையாகவும், புரட்சியாளராகவும் காட்டுவதற்காக அம்பேத்கரின் மேற்கோள்கள், தொகுப்பு நூல்கள், உரைகளுக்குள் தலையைக் கவிழ்த்துக் கொள்ளும்படி தலித் அறிவுஜீவிகள் சொல்கிறார்கள். ஆனால், தீண்டாமை, சாதியக் கட்டமைப்பைத் தகர்ப்பதற்கு அரசியல் மற்றும் சமூகத்தளங்களில் அவர் முன்மொழிந்த தீர்வுகளும் நடைமுறைகளும் தோற்றுப் போவிட்டன என்பதுதான் எதார்த்த உண்மையாக உள்ளன.
இந்த உண்மையை, தலித் ஆய்வுகளுக்கான இந்தியக் கழகம் 2008-ஆம் ஆண்டு ஏற்பாடு செய்த அம்பேத்கர் நினைவு முதற் சொற்பொழிவில் பிரெஞ்சு பேராசிரியர் கிறிஸ்டோப் ஜெஃப்பர்லோ மிகவும் எளிமையாகவும் சாரமாகவும் நிரூபித்திருக்கிறார். தீண்டாமைக்கும் சாதியக் கட்டமைப்புக்கும் எதிராக அம்பேத்கர் தன் வாழ்நாளில் நான்கு மூல உத்திகளை மேற்கொண்டார் என்று தொகுக்கிறார் கிறிஸ்டோப் ஜெஃப்பர்லோ.
அம்பேத்கர், நேரு அரசில் சட்டத்துறை அமைச்சராகப் பதிவிப் பிரமாணம் எடுத்துக் கொள்கிறார்
அம்பேத்கர், நேரு அரசில் சட்டத்துறை அமைச்சராகப் பதிவிப் பிரமாணம் எடுத்துக் கொள்கிறார்
‘‘சமனற்ற வெவ்வேறு படிநிலைகளைக் கொண்ட (இந்திய) சமூகம், கீழ்நிலை சாதிகள் (சூத்திரர்கள்)  – தலித்துகள் என்றும், சூத்திரர்களும் தலித்துகளுமே பல சாதிகள் என்றும் பிளவுபட்டுள்ளனர். டாக்டர் அம்பேத்கரின் முக்கிய நோக்கங்களில் ஒன்று, முதலாவதாக தலித் மக்களை ஐக்கியப்படுத்துவது; பிறகு தலித்துகள் – சூத்திரர்கள் அடங்கிய பகுஜன் சமாஜ் மக்களை ஐக்கியப்படுத்துவது. இரண்டாவதாக, அவர்கள் அனைவருக்கும் தனியொரு அடையாளத்தை உருவாக்கிக் கட்டமைப்பது; அது அவர்களுக்கு சமஸ்கிருதமயமாக்கத்திலிருந்து (பார்ப்பனமயமாக்கத்திலிருந்து) விடுபடுவதற்கான மாற்று வழியைத் தரும். இந்த இரண்டு நோக்கங்களையும் ஈடேற்றுவதற்காக நான்கு வெவ்வேறு மூல உத்திகளை – போர்த்தந்திரங்களை -  தமது நாற்பதாண்டுகால நீண்ட பொதுவாழ்வில் அம்பேத்கர் நடைமுறைப்படுத்தினார்.
1. தீண்டத்தகாதவர்களுக்கு மண்ணின் மைந்தர்கள் என்ற அடையாளத்தை உருவாக்கினால், அவர்கள் சாதிகள் அடிப்படையில் அல்லாத ஒரு மாற்று அடையாளத்தைப் பெறுவார்கள் என்று அம்பேத்கர் நம்பினார்; அவர்கள் தமது சுயமரியாதையை மீட்பதற்காகவும், தம்மிடையே உள்ள உட்பிரிவுப் பிளவுகளைக் கடப்பதற்கும் தாழ்த்தப்பட்ட மக்களுக்குத் தாம் மண்ணின் மைந்தர்கள் என்ற பெருமைக்குரிய வரலாற்றை அவர்களுக்கு உருவாக்கித் தருவதற்கு அம்பேத்கர் முயன்றார். தீண்டத்தகாதவர்கள் பூர்வீகத்தில் பௌத்தர்கள், இந்த மண்ணின் மைந்தர்கள் என்பதை உணருவார்களேயானால், அவர்கள் தமக்குள் நிலவும் சாதியப் பிளவுகளைக் கடந்து தாம் ஒரே இனக்குழுவினர் என்ற நிலைப்பாடு எடுப்பார்கள்; இதனால் பழைய, ஒட்டுமொத்தக் கட்டமைப்புக்கும் எதிராக எழுந்து நிற்பார்கள் என்று அம்பேத்கர் நம்பிச் செயல்பட்டார்.
2. தேர்தல் அரசியல் ஈடுபாடு. இந்து சமுதாயத்தில் உண்மையில் நிலவும் முரண்நிலை – பிளவு, பிராமணர் – பிராமணர் அல்லாதவர் என்பதல்ல; தீண்டத்தக்கவர் – தீண்டத்தகாதவர் என்பதாகும்; இதனால் அனைவருக்கும் சமமான வாக்குரிமை தரும் பிரதேச அடிப்படையிலான தொகுதிகள் என்ற தேர்தல் முறை ஏற்கக்கூடியதல்ல. இதனால் ஒவ்வொரு தொகுதியிலும் தீண்டத்தகாதவர்கள் சிறுபான்மையினர் ஆகிவிடுவார்கள் என்பதால், அவர்கள் பிரதிநிதித்துவம் பெற முடியாமல் போகும். ஆகவே, தீண்டத்தகாதவர்களுக்கென தனித் தொகுதிகள் ஒதுக்கப்பட வேண்டும் அல்லது தீண்டத்தகாதவர்களைத் தனியான வாக்காளர்களாகக் கொள்ளவேண்டும் என்று அம்பேத்கர் கோரினார்.
இரண்டாவது வட்டமேசைக்குப் பிறகு வகுப்புவாரி பிரதிநிதித்துவ ஒதுக்கீடு செய்து, தீண்டத்தகாதோரைத் தனி வாக்காளர் தொகுப்பாக அங்கீகாரம் செயப்பட்டது. அது இந்து சமூகத்தை வகுப்புவாரியாகப் பிளவுபடுத்தி விடும் என ஆத்திரமுற்ற காந்தி, ஒத்துழையாமை இயக்கத்தை அறிவித்து உண்ணாநிலையை மேற்கொண்டார். 71 பிரதிநிதிகளை மட்டுமே கொண்ட தனிவாக்காளர் தொகுப்புமுறையைக் கைவிட்டால், 148 தனித் தொகுதிகள் ஒதுக்கீடு தருவதாக  காந்தி கும்பல் பேரங்கள் நடத்தியபோது, அம்பேத்கர் பணிந்து புனா ஒப்பந்தத்தை ஏற்றார். (காந்தியின் உண்ணாநிலை, தீண்டத்தகாத மக்களுக்கு எதிராக இந்து சமூகத்தை ஆத்திரங்கொள்ளச் செய்துவிடும்; விளைவுகள் விபரீதமாகிவிடும் என்பதால் காந்தியின் நிர்ப்பந்தத்தை ஏற்கும்படியானது என்று அம்பேத்கரும் பிற தலித்துகளும் வாதிடுவதுண்டு).
அந்த அடிப்படையில், 1936-இல் அம்பேத்கர் நிறுவிய இந்தியத் தொழிலாளர் கட்சி அடுத்த ஆண்டு நடந்த தேர்தல்களில் பெருந்தோல்விகளைச் சந்தித்தது. அதற்கு முக்கியக் காரணம், அம்பேத்கர் தன்னைப் பொதுவில் தொழிலாளர்களின் தலைவராகக் காட்டிக் கொண்டு, தீண்டத்தகாதவர்களுக்கு அப்பாலுள்ள வெகுமக்கள் ஆதரவோடு பரந்த சமூக அடித்தளத்தைப் பெற முயன்ற அதேசமயம், வர்க்க அடிப்படையிலான மார்க்சியப் பார்வையை நிராகரித்து, இந்திய சமூகத்தின் அடிப்படை அலகாக சாதியம் மட்டுமே இருக்க முடியும் என்ற முரண்பட்ட இரட்டை நிலையை மேற்கொண்டதுதான். மேலும் மராட்டியத்திலேயே மகர், மாங்க், சாம்பர் ஆகிய உட்பிரிவுகளைக் கடந்த தலித் ஒற்றுமையை ஏற்படுத்துவதிலேயே அவர் தோல்வியடைந்ததை இந்தியத் தொழிலாளர் கட்சி நிராகரிக்கப்பட்டது காட்டியது. அடுத்து, அவர் நிறுவிய பட்டியல் சாதிகளின் பேரவையும் தேர்தல் களத்தில் பெருந்தோல்வியைக் கண்டது. சாதிய அடித்தளத்தைப் பரவலாக்குவது மற்றும் தீண்டத்தகாத மக்கள் நலன்களை மட்டும் காப்பது ஆகிய நிலைகளிடையே ஊசலாடியதுதான் அவரது அரசியல் தோல்விக்கும் பின்னடைவுக்கும் காரணமாயின. இறுதியில், சாதிய அடிப்படையைக் கடந்ததாக இந்தியக் குடியரசுக் கட்சியை அம்பேத்கர் நிறுவினாலும், அவரே நேரடியாகத் தோல்வியைத் தழுவி, தேர்தல் அரசியலில் பின்னடைவே நிரந்தரமானது.
3. அம்பேத்கரின் அரசியல் செயல்பாடு, அரசியல் கட்சிகளை உருவாக்கித் தேர்தல்களில் பங்கெடுப்பதோடு நின்றுவிடவில்லை. தனது தனிப்பட்ட தகுதிகளின் அடிப்படையில் ஆங்கிலேய அல்லது காங்கிரசு அரசாங்கங்களில் செல்வாக்குகளை ஏற்படுத்தித் தீண்டத்தகாதவர்களின் நலன்களுக்கான தமது நோக்கங்களை ஈடேற்றிக் கொள்ளவும் கடுமையாக முயன்றார். ஆங்கிலேய ஆட்சியின் கீழ், ஒருபுறம் மேல்சாதிகளின் பிரதிநிதியாகிய காங்கிரசின் ஆதிக்கம் நிலவிய தேசவிடுதலை இயக்கத்தை நிராகரித்தார். இதனால் தனது சமத்துவ உணர்வுகளைப் பகிர்ந்து கொண்ட ஆங்கிலேயர்களுடன் நெருக்கம் கண்டு, சாதி இந்துக்களுக்கு எதிராகத்  தலித்துகள் பாதுகாப்பைப் பெறமுடியும் என்று நம்பினார். மறுபுறம், இந்தியராகிய அம்பேத்கரால் தனது நாடு ஒரு அந்நிய சக்தியினால் ஆதிக்கம் செலுத்தப்படுவதையும், அதற்கு மேல் அவர் மிகவும் நேசித்த சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்ற மதிப்பீடுகள் நசுக்கப்படுவதையும் சகித்துக் கொள்ள முடியவில்லை. இதனால் ஒருவகைக் குழப்பத்தில் மூழ்கி இருந்த அம்பேத்கர் 1930-களில் காங்கிரசுக்கு எதிரான பகைமை நிலைமை காரணமாக தேசிய உணர்வுகளை மீறி, ஆங்கிலேயர்களுடன் சமசரம் செது கொண்டு தீண்டத்தகாதவர்களுக்கு ஓரளவு சாதகமான பலன்களைப் பெற முயன்றார். இதனால் ஆங்கிலேயர் ஆட்சியில் தலித் தலைவர்கள் சில பதவிகளையும் தீண்டத்தகாதோர் சில சலுகைளையும் பெற்றனர். ஆனால், அம்பேத்கரின் கட்சிகள் அடுத்தடுத்துத் தேர்தல் தோல்விகளைச் சந்தித்ததால் ஆங்கிலேய ஆட்சியில் தலித்துகளின் அமைப்புகள் என்ற வகையில் தலித்துகள் விரும்பிய ஆதாயங்களை அடைய முடியவில்லை.
1956, அக்.14 அன்று மகாராஷ்டிராவிலுள்ள நாகபுரியில் பல்லாயிரக்கணக்கான மகர் சாதியினரோடு புத்த மதத்தைத் தழுவும் அம்பேத்கர்
1956, அக்.14 அன்று மகாராஷ்டிராவிலுள்ள நாகபுரியில் பல்லாயிரக்கணக்கான மகர் சாதியினரோடு புத்த மதத்தைத் தழுவும் அம்பேத்கர்
1946-லிருந்து ‘விடுதலை’யை நோக்கி நாடு நகர்ந்தபோது நடைமுறை அரசியலுக்குத் தகுந்தபடி காங்கிரசுக் கட்சியுடன் அம்பேத்கர் நெருக்கமானார்.  காந்தியின் நிர்ப்பந்தம் காரணமாக 1947 ‘விடுதலை’க்குப் பிறகு அமைந்த அமைச்சரவையில் அம்பேத்கரைச் சட்ட மந்திரியாக்கினார், நேரு. எந்தவித நிபந்தனையும் விதிக்கப்படவில்லை; வெளியிலிருப்பதை விட அரசாங்கத்தில் பங்கேற்றுப் பட்டியலினச் சாதிகளின் நலன்களுக்கு எளிதில் சேவை செய முடியும் என்பதால் காங்கிரசு ஆட்சியில் அம்பேத்கர் பங்கேற்றார். அரசியல் நிர்ணயச் சட்ட வரைவுக் கமிட்டித் தலைவர், சிறுபான்மையினர் கமிட்டி உறுப்பினர் என்று பல கமிட்டிகளில் அம்பேத்கர் பங்கேற்று தலித்துகளின் நலன்களுக்கான விவாதங்களில் பங்கேற்றார். என்றாலும் வல்லபா பட்டேல், ராஜேந்திர பிரசாத், பட்டாபி சீதாராமையா போன்ற காங்கிரசுப் பிற்போக்காளர்களின் முயற்சியாலும் நேருவின் துரோகத்தாலும் இந்து சிவில் சட்டத்தை நிறைவேற்ற முடியாமல் அம்பேத்கர் முறியடிக்கப்பட்டார். ஆட்சியாளர்களுடன் அம்பேத்கர் மேற்கொண்ட கூட்டுறவு மூலம் அமெரிக்க மற்றும் ஆங்கிலேய பாணியிலான, வலுவான முதலாளிய மைய அரசமைப்பை உருவாக்குவதில் வெற்றி பெற்ற அம்பேத்கர், அதற்குள்ளாகவே இந்து சமூக அமைப்பில் சீர்திருத்தங்களைப் புகுத்தும் முயற்சியில் முறியடிக்கப்பட்டு, கசப்பான உணர்வுடன் அரசாங்கத்திலிருந்து வெளியேறினர். தொடர்ந்து வந்த இந்தியக் குடியரசின் முதலாவது நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியும் அடைந்தார்.
4. மதமாற்றம்: அம்பேத்கரின் கடைசி மூலஉத்தி. சாதிய அமைப்பிலிருந்து விடுபடுவதற்கு வேறொரு மதத்திற்கு மாறிவிடுவது என்ற முடிவு இந்து மதம் பற்றிய அம்பேத்கரின் ஆவிலிருந்து தர்க்கரீதியாக வந்ததாகும். “நமக்குத் தேவை சமூக சமத்துவம்; முடிந்தவரை இந்து அமைப்புக்குள் அதைப் பெறுவோம்; இல்லையானால் பயனற்ற இந்து அடையாளத்தைத் தூக்கியெறிவோம்; இந்துத்துவத்தை விட்டொழிக்க வேண்டுவது அவசியமானால், இந்துக் கோவில்கள் பற்றி எங்களுக்குக் கவலையில்லை” என்று 1927 ஒடுக்கப்பட்ட வகுப்புகளின் மாநாட்டுக்குத் தலைமையேற்று அம்பேத்கர் பேசினார். அதைத் தொடர்ந்து பத்துப் பன்னிரண்டு மகர் சாதியினர் இசுலாத்துக்கு மதம் மாறினர்.
பின்னர், 1935 இயோலா மாநாட்டில், இந்து மதத்தில் இருப்பதால்தான் நாம் இழிவுகளையும் வேதனைகளையும் அனுபவிக்கிறோம்; இந்துத்துவத்துடனான எல்லாத் தொடர்புகளையும் துண்டித்துக் கொண்டு நிபந்தனையற்ற சமத்துவம், தகுதி, வாப்புகளை உறுதிப்படுத்தும் வேறெந்த மதத்துக்கும் மாறிப் போய் விடுங்கள்” என்று தீண்டத்தகாதோருக்கு அம்பேத்கர் அறைகூவல் விடுத்தார். வெவ்வேறு மதங்களை ஒப்பீடு செய்து, தாழ்த்தப்பட்டோருக்கு அம்மதத் தலைவர்களிடையே உள்ள வரவேற்பையும் ஆய்வு செய்தார். பிறகு 1936-இல் சீக்கிய மதத்திற்கு மதம் மாறுவதைத் தெரிவு செய்தார்.
சீக்கியராக மதம் மாறும் தீண்டத்தகாதோருக்கு இடஒதுக்கீடு வழங்குமாறு புதிய அரசியல் சட்டம் இயற்றும்படி ஆங்கிலேயரிடம் அம்பேத்கர் கோரினார். பஞ்சாபிலுள்ள சீக்கியருக்கு மட்டுமே அது பொருந்தும் என்று ஆங்கிலேயத் தலைவர்கள் நிராகரித்தனர். பஞ்சாபிலிருந்த சீக்கியத் தலித்துகள், அங்கு ஜாட் சாதியினர் தமக்கு இழைக்கும் கொடுமைகளை எடுத்துச் சொன்னார்கள். சீக்கியர்களின் அரசியல் தலைமையான அகாலிகளும் தீண்டத்தகாதோரின் பெருந்திரள் மதமாற்றத்தை எதிர்த்தனர். சாதி இந்துக்களின் சமூகப் புறக்கணிப்பு மற்றும் திருப்பித் தாக்கும் நடவடிக்கைகளைக் கண்டஞ்சிய அம்பேத்கர், மதமாற்ற முயற்சிகளை அப்போதைக்குக் கைவிட்டார்.
தீண்டாமை மற்றும் சாதி ஆதிக்கத்துக்கு எதிரான பிற மூல உத்திகள் தோல்வியடைந்த பிறகு, மீண்டும் மதமாற்றத் தீர்வை அம்பேத்கர் கையிலெடுத்தார். இறப்பதற்குச் சில வாரங்கள் முன்பாக 1956 அக். 14 அன்று மிகப் பெரிய விழாவொன்றில் நாகபுரியில் பல நூறாயிரக்கணக்கான மகர் சாதியினர் புத்த மதத்தைத் தழுவினர். புத்த மதத்தை இந்து மதத்தின் ஒரு பிரிவாகவே சட்டமும் சாதி இந்துத் தலைமையும் கருதுவதால் கடும் எதிர்ப்பு கிளம்பவில்லை. ஆனாலும், இந்துமதத்துக்கு எதிரான நடவடிக்கை என்று பிரகடனம் செயும் வகையில் மராட்டியத் தீண்டத்தகாதோர் குடியிருப்புப் பகுதியிலிருந்த இந்துக் கடவுளர் சிலைகள் சாதி இந்துக்களிடமே ஒப்படைக்கப்பட்டன.
இதன் மூலம் புத்த மதத்தைத் தழுவிய மக்கள் தமக்குத் தாமே ஒரு புதிய அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டாலும், சமுதாயத்தில் நிலவும் சாதியப் படிநிலையிலிருந்து அம்மக்கள் விடுதலை பெறவே இல்லை. நகர்ப்புறக் குடிசைப் பகுதிகளிலும், கிராமப்புற பகுதிகளில் நிலமற்ற விவசாயிகளாக வாழும் பௌத்த பெருந்திரள் மக்கள் பழைய முறையிலேயே வாழ்கிறார்கள். ஒரு முக்கிய வேறுபாடு, தங்களுக்கு முன்பு மறுக்கப்பட்ட (சடங்கு – சாத்திர) நடைமுறைகள் தமக்குத் தடை செயப்பட்டவை என்பதற்காக அல்ல, தாமே தனியினம் என்ற உணர்வுடன் அவற்றைப் பின்பற்றுவதைக் கை விட்டுள்ளனர். மேலும், சம்பர்கள் போன்ற பிற தீண்டத்தகாதவர்கள் புத்தமதத்தைத் தழுவுவதை நிராகரித்து விட்டனர். புத்த மதத்தைத் தழுவிய மகர்களிலும் ஏழை-எளிய மக்கள் பழைய வழக்கங்களைத் தொடர்கிறார்கள்.
இவ்வாறு தீண்டாமையையும் சாதிய அமைப்பையும் தகர்ப்பதற்கு அம்பேத்கரே முன்வைத்து நடைமுறைப்படுத்திய தீர்வுகளையும் போதனைகளையும் நேர்மையாகத் தொகுத்தறியும் எவரும், அவை தமது நோக்கங்களை ஈடேற்றக் கூடியவை என்று கூற முடியாது. மாறாக, அவை எதிர்மறைப் படிப்பினையைத்தான் கொடுத்திருக்கின்றன.
அம்பேத்கரியம்-7
முதலாவதாக, தீண்டத்தகாதோர் இந்த மண்ணின் மைந்தர்கள் என்ற அடையாளத்தையும் தலித்துகள்-சூத்திரர்களை ஐக்கியப்படுத்தி, அவர்கள் அனைவருக்கும் சாதி அடிப்படையில் அல்லாத தனியொரு மாற்று அடையாளத்தையும் தருவதன் மூலம் சாதிய உட்பிரிவுகளைக் கடந்த ஐக்கியத்தை ஏற்படுத்தி விடமுடியும் என்று அம்பேத்கர் நம்பினார். அதற்கு நேர்மாறாக ஒவ்வொரு சாதிய உட்பிரிவுகளும் தனித்தனி சாதி அடையாளத்தை வலுப்படுத்தி கொள்கிறார்கள். ஓட்டுக்கட்சி அரசியலின் வாக்கு வங்கி உருவாக்கம் மற்றும் சாதிய அரசியல், சமூக ஆதிக்கத்துக்கு இது அவசியமாக உள்ளது. தலித் மக்களிடையேகூட சாதிய உட்பிரிவு அடையாளங்கள் இறுக்கத்தையும் சீரழிவையும்தான் ஏற்படுத்தியிருக்கின்றன.
இரண்டாவதாக, தேர்தல் அரசியல் ஈடுபாடு தலித் அரசியல் தலைவர்கள், அமைப்புகளை மிக மோசமான அரசியல் சந்தர்ப்பவாதத்திலும் பிழைப்புவாதத்திலும் மூழ்கடித்திருக்கிறது. தாழ்த்தப்பட்ட மக்களின் நலன்கள் அடகு வைக்கப்படுகின்றன. தாழ்த்தப்பட்ட மக்கள் அரசியல் விழிப்புணர்வு பெறுவதற்கு மாறாக, தேர்தல் அரசியல் மீது நம்பிக்கை வைக்கும்படி சீரழிக்கப்படுகிறார்கள். சாதி, மத அடிப்படையில் மக்களை அணிதிரட்டி ஆதிக்க சாதியினர் ஆதாயம் அடையும் சூழலில் தலித் கட்சிகளின் சக்தியை பிற அரசியல் கட்சிகள் அங்கீகரிக்க மறுப்பதாக தலித் அரசியல் தலைவர்கள் அவர்களிடம் கெஞ்சுகிறார்கள்.
மூன்றாவதாக, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான தீண்டாமை, வன்கொடுமை மற்றும் சாதியக் கட்டமைப்பை முறியடிப்பதற்கு பதிலாக, ஆட்சியாளர்களின் தயவில் இம்மக்களுக்கு சலுகைகளையும் பதவிகளையும் பெற்று விட முடியும் என்ற நம்பிக்கை. இதன் காரணமாக, ஆட்சியாளர்களையும் அதிகார அரசு அமைப்பையும் பகைச் சக்திகளாகக் கருதி அவர்களை எதிர்த்துப் போராடி, வீழ்த்த வேண்டிய பணிகளை – பாதையை நிராகரிக்கின்றனர். மாறாக, எப்போதும் தற்காலிக நிவாரணங்களையும், எதிரிகளுடன் சமரச-சரணடைவுப் போக்கையுமே மேற்கொள்கின்றனர்.
இவைதாம் அம்பேத்கரிடமிருந்து தலித் தலைவர்கள் கற்றுக்கொண்டவை. இவைதாம் அம்பேத்கரியம் அவர்களுக்கு கற்றுக் கொடுத்தவை!
இதற்கு மாறாக, தீண்டாமையையும் சாதிய சமுதாயத்தையும் பாதுகாத்துவரும், ஆதிக்க சாதிகளுக்கும் ஆளும் வர்க்கங்களுக்கும் சேவை செயும் அரசுக் கட்டமைப்பைத் தாக்கித் தகர்க்கவேண்டும்.  சமூக, அரசியல் ஜனநாயகப் புரட்சி மூலம் சமுதாயத்தைத் தலைகீழாகப் புரட்டிப் போடும் புரட்சியால்தான் தீண்டாமையும் சாதியமும் இல்லாத சமுதாயத்தை உருவாக்கிக்கொள்ள முடியும். அரசியல், ஜனநாயகப் புரட்சியில் பங்கேற்பதன் ஊடாகத்தான் சாதிகளைக் கடந்த உழைக்கும் மக்களின் ஒற்றுமையும் சமத்துவமும் ஏற்பட முடியும்.
எதிரிச் சக்திகளுடன் நேரடியான மோதலும் புரட்சியும் இல்லாமல், பழைய சாதிய சமூகக் கட்டமைப்புக்குள்ளாகவே கொண்டு வரப்படும் சீர்திருத்தங்களால் அம்பேத்கரே முன்மாதிரியாகக் கருதிய மேலைநாடுகளில் கூட சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் அடங்கிய ஜனநாயகம் வந்துவிடவில்லை. ஆகவே, தாழ்த்தப்பட்ட மக்கள் தீண்டாமை-சாதிய சமூகத்திலிருந்து விடுதலைக்கு வேண்டுவது சீர்திருத்தங்கள் அல்ல; மேற்கத்திய பாணியிலான ஜனநாயகப் புரட்சி கூட அல்ல. புதிய ஜனநாயகப் புரட்சி!
படிக்க

No comments:

Post a Comment