காஞ்சியில் மணிமேகலை
கச்சி ஒரு மூதூர்; காஞ்சிக்கு
அருகிலிருந்த ஊர். கச்சி திரையனின் தலைநகர்; காஞ்சி மக்கள் வாழ்ந்த ஊர்.
கச்சி வணிகத்தால் சிறப்புடன் திகழ்ந்தது; காஞ்சி புலமை வளர்ச்சியால்
சிறப்புடன் திகழ்ந்தது. மூதூராகவும், தலைநகராகவும் முதலில் திகழ்ந்தது
கச்சி; கல்விச் சிறப்பால் மேன்மையுற்றிருந்த ஊர் காஞ்சி. கச்சியையும்,
காஞ்சியையும் எந்தவித வேறு பாடுமின்றி மணிமேகலையில் ஒன்றாக உருவாக்கு
கிறார் சாத்தனார். காஞ்சியின் பௌத்த மத வரலாற்றைப் புலப்படுத்துவதில்
மணிமேகலையின் முக்கியத் துவத்தை இங்கு ஆய்வு செய்யலாம்.
மணிமேகலைக் காப்பியம்
மணிமேகலையை இயற்றியவர் மதுரைக் கூல
வாணிகர் சீத்தலைச் சாத்தனார். மணிமேகலைக் காப்பியத்திற்கு “மணிமேகலைத்
துறவு” என்றும் பெயர் உண்டு. இதனை இயற்றிய சாத்தனார், சிலப்பதிகாரத்தை
இயற்றிய இளங்கோ அடிகள் முன்னிலையில் இதனை அரங்கேற்றினார். சாத்தனார்,
இளங்கோ அடிகள், இவரின் சகோதரர் செங் குட்டுவன் ஆகிய மூவரும் ஒரே
காலத்தவர்கள்.
தமிழில் தோன்றிய முதல் சமயக் காப்பியம்
மணிமேகலை. மேலும், தலைமை மாந்தரின் பெயரைக் கொண்ட முதல் காப்பியம்
மணிமேகலை. மணி மேகலைக்கு இணையான அல்லது துணையான தலைமை மாந்தர் இதில் இடம்
பெறவில்லை.
மணிமேகலைக் காப்பியக் காலம்
மயிலை சீனி. வேங்கடசாமி, மணிமேகலைக் காப்பியம் கி.பி.இரண்டாம் நூற்றாண்டில் எழுதப் பட்டதற்கான ஆதாரங்களைச் சுட்டிக் காட்டுகிறார்.
சேரன் செங்குட்டுவனும், மணிமேகலையின்
ஆசிரியர் சாத்தனாரும் நண்பர்கள். கண்ணகியின் வரலாற்றைச் சாத்தனார் சொல்லக்
கேட்டுக் கண்ணகிக்குக் கோயில் அமைத்தார் சேரன் செங் குட்டுவன். இந்த
விழாவுக்கு இலங்கை வேந்தன் கயவாகு என்பவரைச் சேரன் செங்குட்டுவன்
அழைத்தார். இவர் கி.பி.171 முதல் 193 வரையிலும் இலங்கையை அரசாண்டார்.
கயவாகுவின் நண் பனான சேரன் செங்குட்டுவனும், இளங்கோவடி களும், சாத்தனாரும்
ஒரே காலத்தவர் என்பது இதன் மூலம் தெரியவருகிறது. எனவே, மணிமேகலைக்
காப்பியத்தைச் சாத்தனார் கி.பி.இரண்டாம் நூற்றாண்டின் இறுதியில்
இயற்றியிருக்க வேண்டும்.
வட இந்தியாவை குஷான் வம்சத்து அரசர்
கனிஷ்கர், கி.பி.120-162 வரை ஆட்சி புரிந்து, பௌத்த சமயத்தைப் பரப்பினார்.
அவர் காலத்தில் மகா யான பௌத்தத்தை உருவாக்கிய நாகார்ஜுனர், கி.பி. 200-இல்
வாழ்ந்தவர் என்று வரலாற்றுப் பேராசிரியர் கீத் (Prof.Keeth) கூறுகிறார்.
மணி மேகலையில் “சமயக்கணக்கர் தம் திறம் கேட்ட காதையில்”,
தமிழ்நாட்டிலிருந்த பல்வகைச் சமயங் களைப்பற்றிக் கூறுகின்ற சாத்தனார்,
ஹீனயானத் திற்கு மாறுபட்ட கொள்கையை உடைய மகாயான பௌத்தத்தைப் பற்றிக்
கூறாதிருப்பது, நாகார்ஜுனரது கொள்கைகள் பரவுவதற்கு முன்பே, அதாவது
கி.பி.இரண்டாம் நூற்றாண்டின் இறுதியில் மணி மேகலை இயற்றப்பட்டிருக்க வேண்டும் என்று புலப்படுத்துகிறது.
கி.பி.200க்குப் பிறகு தமிழ்நாட்டைக்
களப்பிரர் ஏறத்தாழ கி.பி.575 வரையில் அரசாண்டார்கள். எனவே, கி.பி.200க்குப்
பின்னர் மணிமேகலையும் சிலப்பதிகாரமும் எழுதப்பட்டிருக்க முடியாது.
கி.பி.200-க்குள்ளேயே எழுதப்பட்டிருக்க வேண்டும். அதாவது, கடைச் சங்க
காலத்திலேயே இயற்றப் பட்டவை என்று பல ஆராய்ச்சியாளர்கள் கூறி யுள்ளார்கள்.
சங்கச் செய்யுள்களில் பல்லவர்களைப் பற்றிக் கூறப்படவில்லை. அதிலும்
சிறப்பாகத் தமிழ் நாட்டு வேந்தர்களை ஆங்காங்குக் குறிப்பிட்டுச் சொல்கின்ற
சிலப்பதிகாரமும், மணிமேகலையும் பல்லவ அரசர்களைக் கூறவில்லை.
காஞ்சிபுரத்தைத் தலைநகராகக் கொண்டு தமிழ்நாட்டின் வடபகுதியை அரசாண்ட
மன்னர்களான பல்லவர்களைப்பற்றிக் கூறப்படாததால், பல்லவர் தமிழ்நாட்டிற்கு
வரு வதற்கு முன்னர் “மணிமேகலை” இயற்றப்பட்டிருக்க வேண்டும். காஞ்சிபுரத்தை
அரசாண்டவன் சோழ மன்னன் என்றும், அவன் “நலங்கிள்ளி” என்பவன் தம்பி
“இளங்கிள்ளி” என்பவன் என்றும் மணிமேகலை கூறுகின்றது. பல்லவர் முதன்முதலில்
காஞ்சிபுரத்தைக் கைப்பற்றியது கி.பி.நான்காம் நூற்றாண்டிலென்றும்,
கி.பி.மூன்றாம் நூற்றாண்டு வரையிலும் சோழர்கள் சோழ நாட்டிலும், தொண்டை
நாட்டிலும் வலிமை பெற்றிருந்தார்களென்றும், “குமாரவிஷ்ணு” அல்லது
“ஸ்கந்தவர்மன்” என்னும் பெயருள்ள பல்லவ அரசன் தமிழ்நாட்டின் வடக்கிலிருந்து
வந்து முதன் முதலில் காஞ்சிபுரத்தைச் சோழரிடமிருந்து கைப் பற்றியது
ஏறத்தாழ கி.பி.325 ஆம் ஆண்டென்றும் ஹீராஸ் பாதிரியார் கூறியுள்ளார். எனவே,
மணி மேகலையில் கூறப்பட்டுள்ளபடி காஞ்சியை அர சாண்ட மன்னன் சோழர்
குடும்பத்தைச் சேர்ந்தவர் ஆவார். ஆகவே, மணிமேகலை கி.பி.இரண்டாம்
நூற்றாண்டின் இறுதியில் இயற்றப்பட்டிருக்க வேண்டும் என்பதை விளக்க வேறு
சான்றுகள் ஏதும் தேவை இல்லை என்கிறார் மயிலை சீனி. வேங்கடசாமி.
யார் மணிமேகலை
சிலப்பதிகாரக் காப்பியத்தின் தலைவன்
கோவலனின் மனைவி கண்ணகி. கோவலனின் காதலி கணிகையர் குலத்தைச் சார்ந்த மாதவி.
கோவலனுக்கும், மாதவிக்கும் பிறந்தவள் “மணி மேகலை”. மரக்கலம் உடைந்து,
தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருந்த தன் முன்னோர்களில் ஒருவனைக்
காப்பாற்றிக் கரைசேர்த்தது “மணி மேகலா தெய்வம்”, அந்த தெய்வத்தின் மீது
உள்ள பக்தியின் காரணமாகத் தனக்குப் பிறந்த பெண் குழந்தைக்கு “மணிமேகலை”
எனப் பெயர் சூட்டினான் கோவலன். கடலில் பயணம் மேற்கொள்ளும் நல்லோருக்கு
இடுக்கண் வருமாயின் அவர்களின் துயரைத் தீர்க்கும் கடற்காவல் தெய்வத்தாய்
“மணிமேகலா தெய்வம்” ஆகும்.
பிக்குணி மணிமேகலை
சிலப்பதிகாரத்தில் சமணப் பெண்துறவி
கவுந்தியடிகள்; மணிமேகலையில் மாதவி, அவரின் மகள் மணிமேகலை பௌத்தத்துறவிகள்
ஆவர். இந்த மூன்று பெண்துறவிகளைத் தான் தமிழ் இலக் கியத்தில் முதன் முதலில்
காண்கிறோம். “யாம் அறிந்த வரையில், தமிழ்நாட்டில் பெயர்பெற்ற பௌத்த
பிக்குணி “மணிமேகலை” ஒருத்தியே என்கிறார் சீனி. வேங்கடசாமி. மணிமேகலைக்
காப்பியத்தில் புகார் என்ற பூம்புகார், வஞ்சி மாநகர், காஞ்சி மாநகர் ஆகிய
மூன்று நகரங்களில் மணிமேகலை பௌத்த பிக்குணியாக வலம் வருகிறார்.
புகார் நகரில் மணிமேகலை
முதலில், புகார் நகரில் நடைபெற்ற இந்திர
விழாவில் மாதவியும், அவள் மகள் மணிமேகலையும் கலந்து கொள்ளவில்லை. அந்நாளில்
மணிமேகலை யோடு மாதவி ஆடல் பாடலில் கலந்துகொண்டு ஊர் மக்களை
மகிழ்விக்கவில்லை. இவர்கள் விழாவிற்கு வராமை குறித்து ஊரார் வருந்திய
நிலையில் பழிச் சொற்களும் பரவின. இந்நிலையில், தன் தோழி வயந்தமாலையிடம்
மாதவி கூறுவதாகச் சாத்தனார் மாதவியின் நிலையைச் சுட்டிக் காட்டு கிறார்.
“பொதுவாகப் பெண்களின் கற்பு மூன்று விதமானது. இதில் முதல் வகையைச் சேர்ந்த
பெண்கள், கணவன் இறந்த செய்தி கேள்விப்பட்டதும், அந்த அதிர்ச்சியிலேயே
அவர்களும் உயிர்துறந்துவிடு வார்கள். இரண்டாம் வகைப் பெண்கள் கணவனோடு
உடன்கட்டை ஏறி இறந்து போவார்கள். மூன்றாம் வகைப் பெண்கள் விதவையாக
வாழ்ந்து, பல விதமான துன்பங்களால் தங்களுடைய உடலை வருத்திக் கொள்வார்கள்.
ஆனால் கண்ணகியோ, இந்த மூன்று நிலைகளையும் கடந்தவள். தன்னுடைய கணவனுக்கு
இழைக்கப்பட்ட அநீதியைத் தாங்கிக் கொள்ள முடியாமல் மதுரை மாநகரத்தையே
எரித்துவிட்டாள்.” அப்பேற்பட்ட பத்தினி அவள். இந்த மணிமேகலை என்னுடைய
வயிற்றில் பிறந்த வளாக இருக்கலாம். ஆனால் இவள் கண்ணகியையும் தன்னுடைய
தாயாகவே எண்ணி மதிக்கிறாள். மாபெரும் கற்புக்கரசியான கண்ணகியின் மகளை
எப்படி பரத்தமைத் தொழிலில் ஈடுபடுத்த முடியும். எனவேதான் அவளைத் தவ
நெறியில் புகச் செய்வதே அல்லாது திருத்தம் இல்லாத பரத்தமைத் தொழிலில்
புகுவித்தலை அவள் செய்யச் சார்தல் இல்லை. எனவே, ஐந்து வகையுடைய பெருமைமிக்க
கொள் கைகளாகிய 1. கொலை தவிர்த்தல், 2. களவு செய் யாமை, 3. கள்ளுண்ணாமை, 4.
காமம் சாராமை, 5. பொய் சொல்லாமை ஆகியவற்றை மேற்கொண்டு தானும், தன் மகள்
மணிமேகலையும் துறவுக் கோலம் பூண்டுள்ளோம்” என்றார் மாதவி. (மணி மேகலை
2:40-75). மணிமேகலையின் துறவறத்தை முதன்முதலில் இங்குதான் சாத்தனார்
குறிப்பிடு கிறார்.
அமுத சுரபி
மணிபல்லவத் தீவில் புத்த பீடிகையைத்
தொழுது அமுத சுரபி என்னும் பாத்திரத்தை மணி மேகலை பெற்றாள். “பசிப்பிணி
என்பது ஒருவனது குடிப்பெருமையால் அமைந்த சிறப்பினைக் கெடுக்கும்; பெருமையை
அழிக்கும்; கல்வி, அறிவு என்னும் பொருள் துணையையும் கைவிடுமாறு செய்யும்,
நாணத்தைப் போக்கும்; அழகு மிகுந்த எழிலைச் சிதைக்கும், ஆபரணங்களை அணிந்த
மனைவியோடும் பிறருடைய வாயில்களில் நின்று யாசிக்கவும் செய்யும். அத்தகு
பாவத்திற்குக் காரணமாக உடைய பசிப் பிணியைத் தீர்த்தவர்கள் அடைகின்ற புகழின்
சிறப்பினைச் சொல்லுவதற்கு அடங்காது” என்று தீவ திலகை என்னும் தெய்வம்
பசிப் பணியின் தாக்குதலால் அடையும் தன்மையினை மணி மேகலைக்கு உரைத்தாள்.
அமுத சுரபியைப் பெற்ற மணிமேகலை புகார் நகருக்கு வந்து அறவண அடிகளின்
அறிவுரையை ஏற்று பிக்குணிக் கோலம் பூண்டு அமுத சுரபியைக் கையில் ஏந்தி,
வீதி வழியே சென்றாள். இதனைச் சாத்தனார் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறார்.
“பிக்குணிக்கோலத்துப் பெருந்தெரு அடைதலும்,
ஒலித்து ஒருங்கு ஈண்டிய ஊர்க்குறு மாக்களும்”
(மணிமேகலை 15: 57-58)
அது முதல் மணிமேகலை பௌத்தத் துறவிக் கோலம் பூண்டு அமுத சுரபியின் வாயிலாகப் பசித்தோர்க்கு உணவு அளித்தாள்.
வஞ்சியின் மணிமேகலை
பின்னர் வஞ்சி மாநகர் சென்றாள் மணி மேகலை.
அங்குக் கண்ணகியின் கோட்டத்தை அடைந்து தன் தாயாகிய கண்ணகியையும், தந்தை
யாகிய கோவலனையும் படிவ நிலையில் வணங்கித் துதித்தாள். மணிமேகலை பல்வேறு
சமயக் கருத்து களைக் கேட்டறிந்தார். அவற்றுக்கு மாற்றாக எத்தகைய
கருத்தினையும் உரைக்கவில்லை மணி மேகலை. ‘பல சமயங்களின் கொள்கைகளைவிட புத்த
சமயம்தான் உயர்வானது; வாழ்க்கையைப் பற்றிய பேருண்மைகளை விளக்கக்கூடியது’
என்பது அவளுக்கு அப்போது புரிந்துவிட்டது (என். சொக்கன், மணிமேகலை ப.181,
2002).
காஞ்சியில் மணிமேகலை
வஞ்சி மாநகரில் உள்ள பௌத்தப் பள்ளியை
அடைந்த மணிமேகலை, தந்தை வழி பாட்டனாகிய மாசாத்துவானைக் கண்டு வணங்கினாள்.
அவர் புத்த சமயத்துறவியாகிய நிலையை அறிந்தாள். அவரின் அறிவுரைகளை ஏற்றுக்
காஞ்சி நகரை அடைந்தாள் மணிமேகலை. இது முதல் காஞ்சியின் வரலாறு தொடக்கம்
பெறுகிறது. காஞ்சியில் கிள்ளியின் தம்பியான இளங்கிள்ளி என்பவன் பசுமையான
இலைகளையும் பொன்னென விளங்கும் கிளைகளையும் உடைய போதி மரத்தின் கீழ் அமர்ந்த
புத்த பகவானுக்குக் கட்டிய ஆலயத்தை நண்ணி வணங்கிய மணிமேகலை மலர்ப்பொழிலின்
கீழ்ச் சென்று தங்கி இருந்தாள். மணிமேகலை அங்கே புத்த பீடிகையின் மீது
அமுத சுரபி பாத்திரத்தை வைத்து பசிநோய்க்கு மருந்தாக விளங்கும் உணவை
உட்கொள்ளுவதற்கு எல்லா உயிரும் வருமாறு அழைத்தாள். பார்வையற்றோர், காது
கேளாதோர், உடல் ஊனம் உற்றோர், பாதுகாப்பு இல்லாதோர், ஊமையர்,
நோய்ப்பட்டோர், துறவறம் மேற் கொண்டோர், பசிப்பிணியுற்றோர், வறுமையால்
வாடுவோர் எனப் பலரும், விலங்கு வகைகளும் எனப் பல்லுயிரும் உணவு அருந்திப்
பசிப் பிணியைப் போக்கிக் கொண்டனர் (மணிமேகலை 28: 221 - 230).
மணிமேகலை காஞ்சியில் அறவண அடிகளை வணங்கித்
துதித்தாள். அப்போது, அறவண அடிகள் மணிமேகலைக்கு அறிவுறுத்தும் வகையில்
பௌத்தக் கொள்கையைச் சாத்தனார் சுட்டிக் காட்டுகிறார்.
9 வகையான போலிகளைப் பற்றியும், அவற்றின் தன்மைகளைப் பற்றியும் விளக்குகிறார்.
1. பிரத்தியக்க விருத்தம்
2. அனுமான விருத்தம்
3. சுவசன விருத்தம்
4. உலக விருத்தம்
5. ஆகம விருத்தம்
6. அப்பிரசித்த விசேடணம்
7. அப்பிரசித்த விசேடியம்
8. அப்பிரசித்த உபயம்
9. அப்பிரசித்த சம்பந்தம்
நான்கு வகையான விருத்தங்களைப் பற்றியும் விளக்கினார்.
1. தன்மச் சொரூப விபரீத சாதனம்
2. தன்ம விசேட விபரீத சாதனம்
3. தன்மிச் சொரூப விபரீத சாதனம்
4. தன்மிச் விசேட விபரீத சாதனம்
மேலும் உண்மைப் பொருளைப் பற்றியும், இன்மைப் பொருளைப் பற்றியும் விளக்கினார்.
குற்றம் தவிர்க்க வாழ்க்கை
மணிமேகலை ஏற்கெனவே துறவறம் மேற்
கொண்டுவிட்டாள். அடுத்தது, மணிபல்லவத்தில் தன்முற்பிறவி செய்திகளுக்குப்
பிறகு அமுத சுரபியைப் பெற்று அதன் மூலம் அவள் தானத்தில் ஈடுபட்டாள்.
அறவண அடிகளின் அருளால் புத்த தர்மத்தின்
பெருமைகளையும், ஒழுக்கங்களையும் தெரிந்து கொண்ட மணிமேகலை புத்தர்
திருவடிகளிலேயே அடைக்கலமாகச் சேருவதாகத் தீர்மானித்துவிட்டாள்.
புத்தபிரானின் திருவடிகளை வணங்கி, ‘அவர் சொல்லித்தந்த நெறிமுறைகளின்படி
நடப்பேன். குற்றங்களை விலக்குவேன். தவ ஒழுக்கத்தையே என்னுடைய வாழ்க்கையாக
ஏற்றுக் கொண்டு வாழ்வேன்’ என்றாள். நெடுநாள் நோற்றுக் கடைசியில்
காஞ்சியிலேயே காலமானாள் மணிமேகலை.
நிறைவாக
மணிமேகலை காஞ்சிக்கு வருகை தந்தபோதே அங்குப் புத்தர் கோயில் இருந்ததைக் காட்டுகிறார் சாத்தனார்.
“பைம்பூம் போதிப் பகவற்கு இயற்றிய
சேதியந் தொழுது தென்மேற்காகத்”
- மணிமேகலை 28:175.
இங்குச் சோழ மன்னனால் இந்தப் புத்தர்
கோயில் கட்டுவிக்கப்பட்டதைச் சாத்தனார் குறிப் பிடுகிறார். மணிமேகலை
காஞ்சியை அடைந்த பின்னர் புத்தமத வழிபாட்டுக்கு ஏற்றவற்றை அமைத்து விழா
எடுத்த செய்தியையும் காஞ்சியில் பௌத்தமதம் சிறப்பிக்கப்பட்டதையும்
கீழ்க்கண்ட. பாடலடிகள் காட்டுகின்றன.
பண்டை எம்பிறப்பினைப் பான்மையில் காட்டிய,
அங்கு அப்பீடிகை இது என அறவோன்,
பங்கயப்பீடிகை பான்மையின் வகுத்துத்
தீவ திலகையும் திருமணிமேகலா
மாபெருந் தெய்வமும் வந்தித்து ஏத்துதற்கு,
ஒத்த கோயிலுள் அத்தகப் புனைந்து,
விழவும் சிறப்பும் வேந்தன் இயற்ற”
மணிமேகலை 28:209-215
மேலும், பௌத்த மதத்தின் மீது கொண்ட
நம்பிக்கைகள் காரணமாக, அதற்கேற்ற செயல் பாடுகளை மன்னனும் புரிந்த தன்மையை
மணி மேகலை சுட்டிக் காட்டுகிறது.
“கார்வறம் கூரினும் நீர்வறம் கூராது,
பார் அக வீதியில் பண்டையோர் இழைத்த
கோமுகி என்னும் கொழுநீர் இலஞ்சியொடு
மாமணி பல்லவம் வந்தது ஈங்கெனப்
பொய்கையும் பொழிலும் புனைமின் என்று அறைந்த
தெய்வதம் போயபின் செய்தியாம் அமைத்தது
இவ்விடம் என்றே அவ்விடம் காட்ட”
- மணிமேகலை 28:200-208.
காஞ்சியில் மணிமேகலைச் சிற்பம்
காஞ்சி, பிள்ளையார் பாளையம் என்னும் பகுதியில் “ஸ்ரீ கருகினில் அமர்ந்தவள் அம்மன்” கோயில் உள்ளது. இக்கோயில் தனியாரிடம் உள்ளது.
12-ஆம் நூற்றாண்டில் இச்சிலைகளை உருவாக்கி
யிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. இரண்டு புத்த சிற்பங்களுக்கு அருகில்
“மணிமேகலை”ச் சிற்பத்தின் தலைப்பகுதி மட்டும் காணப்படுகிறது. மணிமேகலைச்
சிற்பத்தின் கண், மூக்கு மிகவும் சிறப்பாகவும், பொருத்தமாகவும்
அமைந்துள்ளன. உதடுகள் ஆழ்ந்து அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளன. காதுகள்
முறைப்படி நீண்டு காணப்படுகின்றன. தலைமுடி அலங்காரத்துடன் தலையைச் சுற்றி
வடிவமைக்கப் பட்டுள்ளது. இந்து முறைப்படி பொது மக்கள் இச்சிலைகளை வழிபட்டு
வருகிறார்கள். இக் கோயிலில் ஒவ்வோர் ஆண்டும் பங்குனி மாதம் கடைசி
வெள்ளிக்கிழமை நாளில் “லட்சதீபம்” விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டு
வருகிறது.
காஞ்சியில் மணிமேகலைக் கோயில்
காஞ்சிபுரம், தலைமை மருத்துவமனையைக்
கடந்து தொடர்வண்டி நிலையத்திற்குப் போகும் வழியில், “ஸ்ரீ தர்மராஜா திரௌபதி
அம்மன்” ஆலயம் ஒன்று உள்ளது. இந்த ஆலயம் மிகவும் பழமையானது. இது
முற்காலத்தில் “மணி மேகலை”க் கோயிலாக இருந்தது என்று மரபுவழி நம்பிக்கை
ஒன்று நிலவி வருகிறது. திரௌபதி அம்மன் ஆலயம் அமைந்துள்ள பகுதி முன்பு
அறப்பணஞ்சேரி என வழங்கப்பட்டது. இங்கு அறவண அடிகள் வாழ்ந்து இருப்பார்
என்றும் “அறவாணர் சேரி” என்பது மரூஉச் சொல்லாக அறப்பணஞ்சேரி என
வழங்கப்பட்டது என்பதும் அறியலாம். மணிமேகலை என்ற அறச்சொல்லை நினைவுகூரும்
வகையில், தற்போது, இந்தத் தெரு “அறம்பெருஞ்செல்வி” என அழைக்கப்படுகிறது.
தற்போது உள்ள தர்மராஜா - திரௌபதி அம்மன்
கோயிலில் முன்பு இருந்த மணிமேகலை, புத்த பிக்குணிகள் சிற்பங்கள்
உடைக்கப்பட்டு மூன்று கி.மீ. தூரத்தில் உள்ள நத்தப்பேட்டை ஏரி கரையில்
போட்டுவிட்டார்கள் என்று கூறப் படுகிறது. உடைந்து, சிதைவடைந்த சிற்பங்களைத்
தவிர்த்து, முழு அளவில் உள்ள மணிமேகலை, புத்த பிக்குணிச் சிற்பங்களை
ஏரிகரையில் திறந்த வெளியில் வைத்து இந்து முறைப்படி வணங்கி வருகிறார்கள்.
இதன் மூலம், காஞ்சியில், பௌத்த மதத்தின் சிறப்பினை மணிமேகலை மிக ஆழமாகவும், அழுத்தமாகவும் தருகின்றதைக் காண்கிறோம். “தவத்திறம் பூண்டு தருமம் கேட்ட காதை”யில்,
பௌத்த மதக் கொள்கைகள் காஞ்சியில் எவ்வாறு பரப்பப்பட்டன, வளர்க்கப்பட்டன
என்ற செய்தி களையெல்லாம் மணிமேகலையால் அறிந்துகொள் கிறோம். பௌத்தத்தின்
எழுச்சியினைக் காட்ட சிறந்ததொரு தலமாக காஞ்சி விளங்கியது என் பதையும்
மணிமேகலையில் காண்கிறோம். இந் நேர்வுகளைக் காணும் போது, அன்றைய பௌத்த
மதத்தின் செல்வாக்கினைக் கணிப்பு செய்கிறது மணிமேகலை என்பதை அறியலாம்.
பௌத்த மதத்தையும், அதன் கொள்கைகளையும்
எல்லோருக்கும் அறிவிக்கவேண்டும் என்னும் நோக்கத்தோடு மணிமேகலை
இயற்றப்பட்டதாகத் தெரிகின்றது என்கிறார் மயிலை சீனி. வேங்கட சாமி. வடக்கில்
நாளந்தாவும், தெற்கில் காஞ்சியும் பழங்கால பௌத்தவியல் ஆராய்ச்சி
மையங்களாகத் திகழ்ந்தன. களப்பிரர்களின் ஆட்சியின் இறுதிக் கட்டத்தில் தமிழக
வணிகத்தின் வீழ்ச்சியும், இவ் வணிகம் பேணிப் பாதுகாத்த பௌத்த மதத்தின்
வீழ்ச்சியும் ஒருங்கே படிப்படியாகத் தமிழகத்தில் நடைபெற்றன. வைணவம், சைவம்
ஆகிய மதங் களின் தாக்குதலை எதிர்கொள்ளமுடியாமல் பௌத்தமும், சமணமும்
தவித்தன. சமணமும், பௌத்தமும் செல்வாக்கு பெற்றிருந்த இடங்களில் தமிழகத்தில்
சைவமும், வைணவமும் செல்வாக்கு பெற்றன. பௌத்தர்களின் இருப்பிடமான
காஞ்சியில் பௌத்தப் பண்பாட்டுப் பெருமை படிப்படியாக நலிந்து சிதைந்தது.
பௌத்தம் தொடர்பான ஆவணங்கள் சமயக்காழ்ப்பால் அழிக்கப்பட்டன.
பயன்பட்ட நூல்கள்
வ.த. இராமசுப்பிரமணியம், மணிமேகலை (மூலமும்,உரையும்)
புலியூர்க்கேசிகன், மணிமேகலை (தெளிவுரை)
என். சொக்கன், மணிமேகலை
முனைவர் கு. பகவதி, காஞ்சிபுரம் (கி.பி.6ஆம்நூற்றாண்டிற்கு முன்)
நடன காசிநாதன்,
மா. சந்திரமூர்த்தி, காஞ்சிபுரம் மாவட்டத் தடயங்கள்
A.Aiappan, Story of Buddhism with special
P.R.Srinivasan, reference to South India
முனைவர் கு. சேதுராமன், பௌத்த சமயக் கலை வரலாறு
Dr.K.Sivaramalingam, Archaeological Atlas of the Antique remains of Buddhism
Dr.G.John Samuel in Tamil Nadu.
Dr.shu Hikosaka, Buddhism in Tamil Nadu
Collected
Papers, A New perspective
Publication Division,Institute of Asian Studies,Chennai,1998.
Dr.S.N.Kandaswamy, Buddhism as expounded in Manimekalai
முனைவர்.ஜி.ஜான் சாமுவேல்,உலகளாவிய தமிழாய்வு - ஓர் அறிமுகம்
முனைவர் க. முருகேசன், செந்தமிழ்க் கோயிலின் சிந்தனைச் சிற்பம்
நேர்காணல் நா.சந்திரசேகரன், தலைவர் போதிதர்மா சொசைட்டி, காஞ்சிபுரம்
(உங்கள் நூலகம் டிசம்பர் 2012 இதழில் வெளியானது)