Friday, February 15, 2013

உலகிற்கே ஒளிதரும் ஞான சூரியனாக புத்தரின் தத்துவம் திகழ்கிறது: முதலமைச்சர் கருணாநிதி

உலகிற்கே ஒளிதரும் ஞான சூரியனாக புத்தரின் தத்துவம் திகழ்கிறது: முதலமைச்சர் கருணாநிதி

சென்னை, பிப்.2-: புத்தர் மகா பரிநிர்வாணம் அடைந்த 2550 ஆம் ஆண்டு நிறைவு தொடக்க விழாவையட்டி முதல்- அமைச்சர் கருணாநிதி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-

இன்று (1&2&2007) முழுமதி நாள். 'திங்களைப் போற்றுதும் திங்களைப் போற்றுதும்' என்று நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம் முழுநிலவை வாழ்த்துகிறது. பூம்புகாரில் இந்திரவிழா நடந்தது சித்திரை முழுமதி நாளில்தான்.

நிறைமதியாளரான புத்தரின் வாழ்க்கையில் முழுமதிக்குப் பெரும் பங்குண்டு. சித்தார்த்தராகப் பிறந்தது, ஞானம் பெற்றுப் புத்தரானது, மண்ணுலகிலிருந்து மறைந்தது ஆகியவை புத்தர் வாழ்க்கையின் முக்கிய நிகழ்ச்சிகள் யாவும் முழுமதி நாளிலே நிகழ்ந்துள்ளன. ஒரு முழுமதி நாளில் புத்தர் விழாவைத் தமிழ்நாடு அரசு கொண்டாடத் தொடங்கியிருக்கிறது.

சித்தார்த்தர் சாதி மத மேடு பள்ளங்களைக் கடக்க புத்தராக மாற்றம் பெற வேண்டியிருந்தது.

புத்த சங்கத்தில் சாதி வேறுபாடு பார்ப்பதில்லை. ஆறுகள் கடலில் கலந்தவுடன் தம் பெயர்களை இழப்பது போல் சங்கத்தில் சேர்பவர்கள் சாதியையும் பெயரையும் இழந்து விடுவதாக புத்தர் கூறினார்.

யாரும் நாட்டை விட்டுப் போகச் சொல்லவில்லை. ஆனாலும் சித்தார்த்தர் அரண்மனையை விட்டு வெளியேறினார். மனைவியையும், மகனையும் பிரிந்து நடந்தார். உலக மக்களின் துன்பத்தைக் கண்டு கண்ணீர் விட்டார். துன்பத்திற்கான காரணத்தையும், போக்கும் வழிகளையும் கண்டறிந்தார்.

தத்துவம் தான் குரு என்றார். நீங்களே தான் முயன்று விடுதலை தேடிக்கொள்ள வேண்டும் என்றார்.

சுகபோக வாழ்வு கூடாது என்று கூறுவது போலவே, கொடிய விரதங்களைக் கடைபிடிப்பதும் தேவையில்லை என்றார்.

தம்முடைய செயல்களிலிருந்து நாம் தப்பவே முடியாது என்றார். துன்பத்தை ஒழிக்கத் தூய வாழ்க்கை நடத்துங்கள் என்றார்.

புத்தர் எதையும் மறைவான தத்துவம் என்று கூறவில்லை. தாம் கூறும் கோட்பாடுகளும், விதிகளும் உலக முழுவதற்கும் சொந்தம் என்று கூறினார்.

மக்களை அறியாதவர் என்று எண்ணினாரேயன்றிக் கெட்டவர்கள் என்று ஒருபோதும் புத்தர் எண்ணவில்லை. தேவதத்தன் என்பவன் அவரை நீக்கிவிட்டுத் தானே புத்த சங்கத்தின் தலைவனாகச் சதி செய்தான். ஆனால் புத்தர் அவனுக்கு முழு மன்னிப்பு அளித்தார்.

பெண்களும் புனித நிலை அடைய முடியும் என்றார்.

புத்தர் எல்லா மக்களும் எளிதில் கையாளக் கூடிய அறநெறியையே வகுத்தார்.

அன்பே இதயத்துக்கு விடுதலை அளிப்பது. அதுவே ஒளி என்றார். தாய் தம் உயிரையும் பொருட்படுத்தாமல் தன் குழந்தையைக் காப்பாற்றுவது போல் எல்லா உயிர்களிடத்தும் எல்லையற்ற அன்பு காட்டக் கற்பித்தார்.

புத்தர் எக்காலத்துக்கும் சொந்தமானவராக இருக்கின்றார். ஆசிய சோதியாக மட்டுமின்றி உலகிற்கே ஒளிதரும் ஞான சூரியனாகப் புத்தரின் தத்துவம் திகழ்கிறது. அவரது வாழ்க்கையும், தத்துவமும் வையகம் பயனுற வாழ்வதற்கு வழி காட்டுகின்றன.

புத்தரின் கொள்கைகளை வளரும் தலைமுறையும், வரும் தலைமுறையும் அறிந்திட அரசு, விழா எடுத்துக் கொண்டாடுகிறது. விழா சிறப்புற அமைந்திட வாழ்த்துகிறேன்.

இவ்வாறு முதல் - அமைச்சர் கருணாநிதி கூறி உள்ளார்.
http://www.vikatan.com/

No comments:

Post a Comment