Thursday, February 14, 2013

புத்தரின் போதனைகளும், வாழ்வியல் நெறிகளும் (Buddha's teachings and Morality of Life )

புத்தரின் போதனைகளும், வாழ்வியல் நெறிகளும் (Buddha's teachings and Morality of Life )

புத்தர் பூரண ஞானம் பொழிந்தார். புத்தர் ஒரு முழு நிறையடைந்தவர். உயர்வு பெற்ற மாமனிதர். ஓர் அற்புத மனிதர். உயர் பேருண்மையால் தம்மத்தையும் வழங்கியவர். தேவர் யாவருக்கும் போதகர்.

மூப்பு (முதுமை) பிணி (நோய்) சாக்காடு (மரணம்) உலகத்தின் துயரம், கடலைவிடப் பெரிது; கடலைவிட ஆழமானது. ஒரே துன்ப வெள்ளம். துன்பத்திற்கும் மரணத்திற்கும் பாலம் அமைந்தது போலவே வாழ்க்கை விளங்குகிறது.

இன்பங்கள் எல்லாம் துன்பங்களிலே முடிகின்றன. மோகம் ஊட்டம் இளமை முதுமையிலே முடிகின்றது. காதலெல்லாம் பிரிவிலேயே முடிகின்றது. வாழ்க்கை வெறுக்கத் தகுந்த மரணத்திலேயே முடிகின்றது.

இந்த ஏமாற்றதிலேயே நானும் இவ்வளவு காலமாக ஆழ்ந்திருந்துவிட்டேன். இதோ என் கண்களை மறைந்திருந்த திரை கிழிந்து விழுந்துவிட்டது.

எனக்கும் என்னைப் போன்ற சடலமொத்த சகலருக்கும் உதவியாக நான் உண்மையை உணர்ந்து கொள்வேன்.

தெய்வங்களை நினைத்து இரங்கி தங்குவதில் பயனில்லை. பிரம்மனே இவ்வுலகைப் படைத்தான் எனில், இதை ஏன் இவ்வளவு துயரத்தில் ஆழ்த்தி வைக்க வேண்டும்.

ஆற்றங்கரையிலுள்ள மரம் போன்றது உடல். எப்பொழுதும் அலையடித்து அதன் வேரிலுள்ள மண்ணை நாள்தோறும் கரைத்துக் கொண்டேயுள்ளது.

வாழ்க்கை நிலைப்பதில்லை. புல் நுனிமேல் நீர்போல நிலையாமை மணப்பறையைக் கேட்டுக் கொண்டிருக்கும்போது அதுவே பிணப்பறையாக மாறியிருக்கின்றது. தந்தை, தாய், தாரம் , தமர், மக்கள் எல்லோரும் சந்தையிலே கூடியுள்ள கூட்டம். எவரும், உயிரைப் பிரியாமல் பிடித்து வைத்துக்கொள்ள முடியாது என்பதே மனித சரித்திரம்.

ஆகவே, இருப்பது பொய்; போவது மெய் என்ற உண்மை சித்தார்த்தரின் உள்ளத்தில் பசுமரத்திற் பதிந்த ஆணிபோல் பதிந்துவிட்டது.


இன்பம் துன்பத்திலும், அன்பு பிரிவிலும், வாழ்வு மரணத்திலும், மரணம் புதுப்பிறவிகளிலும் முடிவாகின்றன. பிறவிகள் தோறும் உயிர்கள் பொய்ம்மை மயக்கத்தில் ஆழ்ந்திருக்கின்றது.

மரணத்திற்குக் காரணம் எது? மனிதன் மரணமற்ற வாழக்கையைப் பெறுவது எப்படி? மனிதன் துக்கம் நீங்கி சுகம் பெறுவது எக்காலம்? இத்தகைய கருத்துக்களை அவர் மனம் ஆராய்ந்து கொண்டிருந்தது.

உலக இன்பங்களைக் கண்டு வெறுத்துவிட்டேன். விடங்கொண்ட நாகங்களைக் காட்டிலும், வானத்திலிருந்து விழுந்த இடிகளைக் காட்டிலும், காற்றோடு கலந்து பரவும் பெருநெருப்பினைக் காட்டிலும், நான் இந்த இன்பங்களைக் கண்டு அதிகமாக அஞ்சுகின்றேன்.

நிலையற்ற இன்பங்களே நமது உண்மையான இன்பத்தையும், செல்வத்தையும் கொள்ளை கொள்ளும் சோதரர்கள். இவைகள் யாவும் கானல் நீரோ!

விறகிட்ட தீயைப்போல, இன்பத் தோட்டம் பெருகிக் கொண்டேயிருக்கும். அதற்கு ஓய்வுமில்லை. ஒழிவுமில்லை. அதற்கு அடிமைபட்டவர்களுக்கு இம்மையிலும் இன்பமில்லை; மறுமையிலும் இன்பமில்லை.

மயக்கத்தினாலேயே மக்கள் இந்த இன்பங்களின் வலையில் வீழ்கின்றனர். உண்மையை உணர்ந்தவன் சித்தத் தெளிவுடையவன். தீமையைக் கண்டு ஒதுங்கியவன், தானாக மறுபடி இந்த இன்பங்களிலே எங்ஙனம் நாட்டம் கொள்வான்.

இன்பங்கள் நிலையற்றவை; முடிவில் இவற்றால் துன்பங்களே வருகின்றன. ஒரு காலத்தில் இன்பங்களாக உள்ளவை, இன்னொரு காலத்தில் துன்பங்களாக மாறுகின்றன. உலகில் இன்பமும் துன்பமும் இணைந்தே இருக்கின்றன.

இன்பம் வேண்டி மனிதன் துடிக்கின்றான். அதனால் துன்பமே விளைகின்றது. மரணம் அவடுனைய தனித்தன்மையை அழித்து விடுகின்றது. ஆயினும் அவனுக்கு அமைதியில்லை. மீண்டும் தனித் தன்மை பெற்று அவன் புதப்பிறவிகள்ளை மேற்கொள்ளுகிறான்.

உலகில் பாவமும் துக்கமும் பரவி நிற்கின்றன. மக்கள் உண்மையைக் காட்டிலும் மயக்கமே மேல் என்று கருதி வழிதவறிச் செல்கின்றனர். பாவமே பார்வைக்கு இனியதாய் தெரிகின்றது. ஏதோ செயல் - செயல் என்று அவர்கள் அடைகிற இன்பங்களும், நீர்க்குமிழிகளாகவே இருக்கின்றன. குமிழிகள் உடைந்த பின் அவற்றினுள் எதுவுமே இல்லை.

கடின முயற்சி இடையறாத தேடல், ஆழ்ந்த தியானம் மற்றும் ஒருமுகப்படும் மனம் ஆகியவற்றை ஆறாண்டு காலம் மேற்கொண்டமையால் , அவர் தம் மனத்தை மாசற்றதாகவும், தெளிவுற்றதாகவும், அமைதியுள்ளதாகவும் ஆக்கி கொள்ள முடிந்தது.

உயிர்களின் துன்பத்திற்குக் காரணம் பிறப்பு, பிறப்பிற்குரிய காரணம் ஆசை, ஆசைக்குக் காரணம் அறியாமை என்னும் ஞானம்.

சுகத்திலிருந்துதான் வேதனை பிறக்கிறது; சுகத்திலிருந்துதான் பயம் பிறக்கிறது. சுகத்திலிருந்து விடுபட்டவன் வேதனையையோ பயத்தையோ அறியமாட்டான்.

விழித்தெழு; கருத்தின்றி இருக்காதே; தம்ம ஒழுக்கத்தைக் கடைபிடி; தர்ம வழியிலேயே நடப்பவனுக்கு, இகத்திலும் சுகம்; பரத்திலும் சுகம்;

பேராசையின்மை பரமசுகம்; திருப்தியே பரமதனம். விசுவாசமே பரம்பந்து, நிர்வாணமே பரமசுகம்.

வெற்றி வெறுப்பை வளர்க்கும்; தோல்வியுற்றோர் துக்கத்தில் வாழ்வார். வெற்றியும், தோல்வியும் விரும்பாதவன் சுகமும், சாந்தியும் பெறுகின்றான்.

தன் இயற்கைத் தேவைகளை நிறைவு செய்வது அவனைக் களங்கப்படுத்தாது. உடலின் தேவைகளுக்கு ஏற்ப அவன் புசித்துப் பருகட்டும்.

ஒருவன் தானாகவே பாவம் செய்கிறான். தானே தனக்கு கேடு தேடுகின்றான். ஒருவன் தானாகவே பாவத்தை விலக்குகின்றான். தானே தன்னைப் புனிதமானவன் ஆக்குகின்றான். ஒருவனின் சுத்தமும், அசுத்தமும் அவனது செயலே! எவனும் அடுத்தவனைப் புனிதமாக்குவதில்லை.

மனம், வாக்கு, செயல் ஆகிய மூன்றிலும் எவன் தூய்மையாகச் செயல்படுகின்றானோ அவனே மாமுனிவர் காட்டிய வெற்றிப் பாதையில் செல்பவன் ஆவான். பிறக்குக்கு எது காரணமோப அதுவே இறப்புக்கும் காரணமாகிறது.

அரிதரிது மானிடராய் பிறத்தல் அரிது. நிலையாமை உடைய வாழ்வு கடினமாகும் நிலையான உண்மையான உணர்தல் கிடனம். அரிதரிது புத்தருடைய அரிய தோற்றம்.

புத்தரின் போதனைகள் தம்மம் என்று சொல்லப்படுகின்றன. தம்மம் திரிபிடகம் என்று தொகுக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment