அம்பேத்கார் பௌத்த வழியைத் தழுவியது சரியா ?
முனைவர். பாபாசாயே பீம் ராவ் அம்பேத்கார் ஏன் புத்தரைத் தழுவினார் என்ற கேள்விக்குப் பதில் தேடும் முகமாக எண்ணற்ற ஆய்வாளர்கள் பல்லாயிரக் கட்டுரைகளைச் சமர்பித்துவிட்டார்கள். அம்பேத்கார் ஏன் கிறித்தவத்தையோ, இஸ்லாமையோ தழுவவில்லை என்ற கேள்வி பலருக்கும் பல முறை எழுந்தது தான். ஆனால் அம்பேத்கார் ஒரு நொடியில் எடுத்த முடிவல்ல இது. அம்பேத்கார் ஒடுக்கப்பட்ட சாதியினருக்கு மட்டுமே தலைவர் என்ற தோற்றம் இன்று எழுந்துவிட்டது, ஆனால் அம்பேத்கார் போன்ற தலைவர் ஒடுக்கப்பட்டவர்களையும் தாண்டி அனைத்து தெற்காசிய மக்களுக்கும் ஆன ஒரு மாபெரும் தலைவர். வெறும் வார்த்தை விளையாட்டுக்களால் அரசியல் செய்தவர் அல்ல அவர். ஆழ்ந்த அறிவும், தேடலும், புரிதலும் எதிர்க்காலச் சிந்தனையும் நிரம்பியவர் என்பதில் ஐயமில்லை.
அம்பேத்கார் இஸ்லாமையோ, கிறித்தவத்தையோ தழுவ விரும்பவில்லை. ஏனெனில் அந்த இரு மதங்களும் ஒடுக்கப்பட்டவர்களுக்கு விடுதலைத் தரப்போவதில்லை என்று நன்கு உணர்ந்தவர். அது எவ்வளவு உண்மை என்பதைச் சமக் காலத்தில் சமூகத்தை அவதானிக்கும் போது உணர்ந்துக் கொள்ளலாம். அத்தோடு இஸ்லாமை தழுவி இருந்தால், இன்று கிறித்தவ உலகம் ஒடுக்கப்பட்டவர்களுக்கு எதிராக இருந்திருக்கும். கிறித்தவத்தைத் தழுவி இருந்தால் இஸ்லாமிய உலகின் விரோதிகளாக ஆக்கப்பட்டு இருந்திருப்பார்கள்.
ஆனால் ! அம்பேத்கார் இந்திய வரலாற்றை ஆராய்ந்தார், மானுடவியலை ஆராய்ந்தார். பார்ப்பனர்களால் மூடி மறைக்கப்பட்ட புத்தரை கண்டு கொண்டார். உண்மையான புத்தரைக் கண்டு கொண்டார். பார்ப்பனர்களால் புனையப் பட்ட புத்தரை அல்ல, மாறாக இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஒரு சமூகப் போராளியைக் கண்டு கொண்டார்.
பார்ப்பனம் பௌத்தத்தை ஆட்கொண்டது. பௌத்த தருமங்களை மறைத்தது. போலி வழிப்பாட்டு முறைகளையும், சிலைகளையும் வடித்தது. புத்தனை சிலையாக்கி மையத்தில் அமரவைத்துவிட்டு தனது கோர முக வெளிப்பாட்டினை அதன் சுழற்சியில் சுழல விட்டது. சாதியங்களை வெறுத்த அறிவனை மறைத்து, சாதியங்களை ஊக்கம் தந்தது. பௌத்தம் மன்னர்களைக் கவர்ந்தக் காலத்தில் பிழைப்புக்காகப் பௌத்த பிக்குகள் போல வேடமிட்டுக் கொண்டனர். பௌத்தத்தை மகாயனம், தெரவாதம் எனப் பிளவுறச் செய்தனர். வைதிகக் கடவுளை வழிபடச் செய்தனர். பல பிளவுகளை உண்டாக்கி தமக்குள் அடித்துக் கொள்ளச் செய்தனர். புத்தரைச் சுற்றி புராணங்கள் எழுப்பட்டன.
புத்தரின் போர்க் குணத்தை மறைத்து அவரை ஒரு சாதுவாக்கினார்கள். ஒரு அவதாராமாகச் சித்தரித்தார்கள். புத்தர் பறந்து வந்தார், அற்புதங்கள் செய்தார் எனப் புனைவுகள் பரப்பப் பட்டன. உண்மையான புத்தர் குழி தோண்டிப் புதைக்கப்பட்டார். உண்மையான புத்தரின் வேகம் சமுதாயத்தில் இருந்து குறைந்த தருணத்தில் புத்தம் என்பதையே குழித் தோண்டிப் புதைத்துவிட்டனர்.
ஆனால் யாரும் சற்றும் சிந்தித்து இருக்க மாட்டார்கள். பௌத்தம் இந்தியாவில் இருந்து அழிக்கப்பட்டுச் சுமார் ஆயிரம் ஆண்டுகள் கழித்து மீண்டும் துளிர்க்கும் என்பதை. அறிவன் எனப்படும் கௌதம சித்தார்த்த பௌத்தர் வெறும் தியானம் செய்யவோ, உயிர்கொலை மறுக்கவோ மட்டும் போதிக்கவில்லை. பகுத்தறிவினை வளர்க்க முற்பட்டார், சமூக ஏற்றத் தாழ்வுகளையும், சாதியங்களையும், பார்ப்பனர் பரப்பி வந்த மூடப் பழக்கங்களையும் சாடியவர்.
ஏனையோர் போல அதிகாரங்களைக் கைப்பற்றவோ, அரசக் கட்டில் ஏறவோ, செல்வங்களைச் சேர்க்கவோ, பல மனைவிமாரை அடையவோ விரும்பவில்லை. சொல்லப் போனால் இவை யாவும் அவருக்குத் தானாகக் கிட்டிய போதும் உண்மையைத் தேடி புறப்பட்டார். தவம் செய்தால் வரம் கிடைக்கும் என்ற பித்தலாட்டத்தைத் தாமே முயன்று கண்டறிந்தார். மெய்ஞானத்தை உணர்ந்து கொண்டார்.
தீண்டத் தகாதவராய்க் கருதப்பட்ட சிறுவனிடம் பால் வாங்கி அருந்தினார். இளவரசனாகப் பஞ்சணையில் படுத்தவர் பரதேசியாய் ஊர் ஊராய் சென்று பகுத்தறிவு வளர்த்தார். ஆனால் இந்த உண்மை வரலாறுகளை மறைப்பதில் முனைப்பாக இருந்தனர் பிற்காலப் பார்ப்பனர்கள். பிக்கு வேடம் பூண்டு இன்றளவும் கொடுங்கோல் பார்ப்பனத்தை உலகத்தில் தக்க வைக்க முயல்கின்றனர் சிலர்.
ஆனால் உண்மையான அறிவனை, புத்தனை அம்பேத்கார் கண்டறிந்தார். புத்தன் வழி மட்டுமே உலகின் ஒடுக்கப்பட்டோரை காக்கும் எனத் தீர்மானித்தார். தொட்டால் தீட்டு என அறியப்பட்ட மகர் மக்கள் அனைவரும் நாக்பூரில் பௌத்தத்தைத் தழுவினார்கள். ஆம் ! பழமை சூழந்த மடமை தாங்கிய பௌத்தமல்ல, அது அம்பேத்கார் கண்டறிந்த மெய்மையான பௌத்தம். இன்று மகர் மக்கள் கல்வி, வேலை வாய்ப்பில் முன்னேறி விட்டனர். சமூக நிலைகளில் முன்னேறி வருகின்றார்கள். ஆனால் அவரின் பேச்சைக் கேட்காமல் இஸ்லாமுக்கும், கிறித்தவத்துக்கும் தாவிய தலித்களின் வாழ்வு எப்படி இருக்கின்றன என்பதைக் கண்கூடாக நீங்கள் காணலாம். மாறாக இந்து மதத்துக்குள்ளேயே இருந்து வரும் ஒடுக்கப்பட்டவர் நிலை என்பது அதனை விட மோசமாகவே இருந்து வருகின்றது.
சமத்துவம் விரும்பும் எவரும் அம்பதேகாரை வெறுக்க மாட்டார்கள். அம்பேத்கார் காட்டிய பௌத்தத்தை மறுக்க மாட்டார்கள். தலித்கள் மட்டுமல்ல நம் அனைத்து சாதி மக்களும் சமத்துவம் விரும்ப வேண்டும். உண்மையான அறிவன் காட்டிய நான்கு வாய்மைகள், எண்வழிகள், ஐந்தொழுக்கங்களைக் கடைப்பிடிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். அத்தோடு ஒரு சமூகப் போராளியாகத் தம்மை மாற்றிக் கொள்ள வேண்டும்.
அம்பேத்கார் காட்டிய வழியினைப் பார்ப்பனர்களால் உடைக்க முடியவில்லை. ஒருவேளை இஸ்லாமுக்கோ, கிறித்தவத்துக்கோ தாவி இருந்தால் தமது அதிகாரக் கோரப் பிடியில் ஒடுக்கப்பட்டவர்கள் தீவிரவாதிகளாகவோ, கலாச்சார வியாதிகளாகவோ சித்தரிக்கப்பட்டுச் சின்னாப்பின்னமாகி இருப்பார்கள். ஆனால் அம்பேத்கார் காட்டிய பௌத்தத்தை இன்றளவும் பார்ப்பனத்தால் நெருங்க முடியவில்லை என்பது தான் மறுக்க முடியாத உண்மை.
No comments:
Post a Comment