என்னைப் போன்ற மக்களையே நான் உருவாக்க நினைக்கிறேன் - III
ஒரு பள்ளியின் ஆசிரியர், ஒரு ‘மகர்’ மாணவனைப் பார்த்து, ‘ஏய் யார் நீ? இந்த ஜாதியைச் சார்ந்தவன் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற முடியுமா? உனக்கு எதற்கு முதல் வகுப்பு? நீ மூன்றாம் வகுப்பிலேயே இரு. முதல் வகுப்பெடுப்பது பார்ப்பனருடைய வேலையல்லவா?’ என்று கேட்டால், அந்த மாணவன் என்ன விதமான புத்துணர்வை பெற முடியும்? அவன் எப்படி முன்னேற முடியும்? புத்துணர்வை உருவாக்குவதற்கான அடிப்படை அவனுடைய மனதில் உருவாக்கப்பட வேண்டும். உடலாலும் மனதாலும் ஆரோக்கியமாக இருந்து அதன் மூலம் துணிவாகவும் தன்னம்பிக்கையுடனும் வெற்றி பெறும்போதுதான் அவன் புத்துணர்வு பெற முடியும். ஆனால், தாழ்வு மனப்பான்மையை இந்து மதம் அவனுள் புகுத்தியிருக்கிறது. அது ஒருபோதும் புத்துணர்வை வளர்க்காது. இத்தகைய தாழ்வு மனப்பான்மையும், புத்துணர்வின்மையும் பல ஆயிரம் ஆண்டுகளாக அவன் மீது திணிக்கக் கூடிய அளவுக்கு சூழல்கள் அமைந்திருக்கின்றன. இத்தகைய மனிதர்கள் ‘கிளார்க்’ வேலைகள் மூலம் தங்கள் வயிற்றைத்தான் நிரப்பிக் கொள்ள முடியும். வேறு என்ன நடக்கும்?
மனிதனின் புத்துணர்வுக்குப் பின்னால் இருப்பது அவனுடைய உள்ளம். ஆலைகளின் உரிமையாளர்களை உங்களுக்குத் தெரிந்திருக்கும். அவர்கள் தங்களுடைய ஆலைகளுக்கு மேலாளர்களை நியமித்து, தங்கள் ஆலைகளை நடத்துகிறார்கள். இந்த ஆலை உரிமையாளர்கள் பல்வேறு தீய பழக்கங்களுக்கு ஆட்பட்டு, அவர்கள் பண்படாதவர்களாகவே இருந்து வருகிறார்கள். நாம் தொடங்கியிருக்கும் இந்த இயக்கம், உங்கள் மனதில் புத்துணர்வை ஏற்படுத்தக்கூடிய பணியை செய்கிறது. அதன் பிறகு கல்வி அளிக்கப்பட வேண்டும். நான் கல்வி கற்கத் தொடங்கியபோது கிழிந்த துணிகளையே உடுத்தியிருந்தேன். பள்ளியில் எனக்கு குடிப்பதற்கு தண்ணீர்கூட கிடைக்காது. பல நாட்கள் தண்ணீர் இன்றி நான் பள்ளியில் இருந்திருக்கிறேன். பம்பாயில் உள்ள எல்பின்ஸ்டன் கல்லூரியிலும் இதே சூழல்தான் நிலவியது. இத்தகைய சூழலில் வேறு எந்த மாதிரியான நிலைமைகளை உருவாக்க முடியும்? வெறும் கிளார்க்குகளைத்தான் உருவாக்க முடியும்.
நான் டெல்லி வைசிராய் குழுவில் இருந்தபோது லின்லித்கோதான் வைசிராயாக இருந்தார். ‘முஸ்லிம்களுக்கு கல்வி அளிக்க அலிகார் பல்கலைக்கு வழக்கமான செலவுகளோடு கூடுதலாக மூன்று லட்சம் ரூபாய் செலவழியுங்கள். அதேபோல, மூன்று லட்ச ரூபாயை இந்து பனாரஸ் பல்கலைக்கு வழங்குங்கள். ஆனால், நாங்கள் இந்துக்களோ முஸ்லிம்களோ அல்ல. நீங்கள் எங்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தால், அவர்களுக்கு செய்ததைப் போல ஆயிரம் மடங்கு அதிகமாக செய்ய வேண்டும். முஸ்லிம்களுக்கு செய்கின்ற அளவுக்காவது எங்களுக்கு செய்யுங்கள்’ என்று சொன்னேன். அதற்கு லின்லித்கோ, நீ என்ன சொல்வதாக இருந்தாலும் அதை எழுதிக் கொடு என்று சொல்லிவிட்டார். எனவே, அதை அப்படியே நான் ஒரு கோரிக்கை மனுவாகத் தயாரித்தேன். அந்த நகல் என்னிடம் அப்படியே இருக்கிறது. அய்ரோப்பியர்கள் மிகவும் கருணை உள்ளவர்கள். அவர்கள் என்னுடைய வரைவுத் திட்டத்தை ஏற்றுக் கொண்டார்கள்.
ஆனால், எந்த வேலைக்காக அந்தப் பணம் செலவழிக்கப்பட வேண்டும் என்பதுதான் பிரச்சினை. நமது பெண்கள் கல்வி கற்கவில்லை என்பதால், அவர்களுக்கு கல்வி வழங்க வேண்டும் என்று அவர்கள் எண்ணினார்கள். அவர்களுக்கென்று விடுதிகள் தொடங்கப்பட்டன. அதற்காக பணம் செலவழிக்கப்பட்டது. நம்முடைய பெண்களுக்கு கல்வி வழங்கப்பட்டு அதன் மூலம் அவர்கள் படித்த பிறகு, வீட்டில் பல்வேறு வகையான உணவுகளை தயாரிப்பது யார்? அவர்களுடைய கல்வியின் ஒட்டு மொத்த விளைவு என்ன? அரசு பல்வேறு பிரிவுகளின் கீழ் பணத்தை செலவழித்தது. ஆனால், கல்விக்காக பணத்தை அவர்கள் செலவழிக்கவில்லை.
எனவே, நான் ஒரு நாள் லார்ட் லின்லித்கோவிடம் சென்று கல்விக்காக ஒதுக்கப்பட்ட தொகை என்னவாயிற்று என்று கேட்டேன். மேலும் நீங்கள் கோபப்படவில்லையென்றால், நான் உங்களிடம் ஒரு கேள்வியை கேட்க விரும்புகிறேன். ‘நான் மட்டுமே அய்ம்பது பட்டதாரிகளுக்கு சமமானவன் இல்லையா?’ என்றேன். அவர் அதை ஏற்றுக் கொள்ள வேண்டியிருந்தது. மீண்டும் நான் அவரிடம் கேட்டேன். இதற்கு என்ன காரணம்? ‘எனக்கு அதற்கான காரணம் தெரியவில்லை’ என்றார். என்னுடைய படிப்பு அவ்வளவு மகத்தானது. என்னால் அரண்மனையின் உச்சியில் அமர முடியும். என்னைப் போன்ற மக்களைத்தான் நான் உருவாக்க நினைக்கிறேன். நம்முடைய மக்கள் பாதுகாக்கப்பட வேண்டிய வகையில் அறிவார்ந்த மாணவர்கள் உருவாக்கப்பட வேண்டும். வெறும் எழுத்தரால் என்ன செய்ய முடியும்? நான் சொன்ன அந்த நிமிடமே லார்ட் லின்லித்கோ ஒப்புக் கொண்டு, பதினாறு மாணவர்களை உயர் படிப்புக்காக இங்கிலாந்துக்கு அனுப்பினார். இந்தப் பதினாறு பேரில் சிலர் அரைவேக்காடுகளாகவும் சிலர் முழு அறிவாளிகளாகவும் இருக்கக் கூடும். அது வேறு பிரச்சினை. ஆனால், அதன் பிறகு சி. ராஜகோபாலாச்சாரி, இத்தகு உயர் கல்வித் திட்டத்தையே ரத்து செய்து விட்டார்.
(15.10.1956 அன்று மாபெரும் மதமாற்ற நிகழ்வையொட்டி ஆற்றிய உரை)
நன்றி:தலித்முரசு
No comments:
Post a Comment