அணபணாசதி – வணக்கத்திற்குரிய அஜான் சுமேதா
Anapanasati - Venerable Ajahn Sumedho
(From the book 'Now is the knowing')
Anapanasati - Venerable Ajahn Sumedho
(From the book 'Now is the knowing')
Anapanasati, a Pali word, means mindfulness of the in-breath and the out-breath.
உள் மூச்சின் மீதும் வெளி மூச்சின் மீதும் உன்னிப்பாகக் கவனம் செலுத்துவதற்குப் பாலி மொழியில் 'அணபணாசதி' என்று பெயர்.
விசேடமற்ற செயல்கள் மீது நாம் கவனம் செலுத்துவதில்லை. மிகச் சில சமயங்களில் தான் நாம் மூச்சு விடுவதைக் கவனிக்கின்றோம். உதாரணத்திற்கு ஆஸ்துமா இருக்கும் போது அல்லது வேகமாக ஓடிவந்த பிறகு மட்டுமே நமக்கு மூச்சின் மீது கவனம் வருகிறது. ஆனால் அணபணாசதியின் போது நாம் நமது சாதரண மூச்சையே ஒரு தியானப் பொருளாகப் பயன்படுத்துகிறோம். மூச்சை எவ்விதத்திலும் நாம் கட்டுப் படுத்த முயற்சிப்பதில்லை. எப்போதும் எடுக்கும் உள் மூச்சிடமும் வெளி மூச்சிடமும் நாம் கூடவே இருக்கின்றோம். மூச்சை நாம் உருவாக்கவும் இல்லை, நாமாகக் கற்பனை செய்யவும் இல்லை. நம் உடலின் ஒரு இயற்கையான குணம் மூச்செடுப்பதாகும். அதன் மீது கவனம் செலுத்தினாலும் சரி செலுத்தாவிட்டாலும் சரி உயிர் உள்ள வரை மூச்செடுப்பதும் இருக்கப் போகிறது. எனவே, எப்பொழுதும் உள்ள மூச்சின் மேல் நாம் எந்நேரமும் கவனத்தைச் செலுத்தலாம். இதற்கு எந்தத் தனிப்பட்ட தகுதியும் தேவையில்லை. ஒரு உள் மூச்சையும் ஒரு வெளி மூச்சையும் கவனிக்கப் பெரிய அறிவாளியாக இருக்க வேண்டுமென்பதில்லை. அறிவை வளர்க்கப் பெரும் சித்தாத்தங்களைக் கற்க வேண்டிய அவசியமும் இல்லை. சாதாரணச் செயல்களைக் கவனித்தாலே போதும்.
மூச்சிற்குக் கவர்ச்சியான குணம் ஏதும் இல்லாததால் அதைக் கவனிப்பதில் நாம் அக்கறை காட்டாமல் பொறுமை இழந்துவிடுகிறோம். எந்த நேரமும் முயற்சி செய்யாமலே எதாவது கிடைக்குமா என்றும், எதன் மீதாவது முயற்சியின்றியே கவனத்தைச் செலுத்த முடியாதா என்றுமே நினைக்கின்றோம். நல்ல இசையைக் கேட்கும் போது அதன் மீது கவனத்தைச் செலுத்த முயற்சியேதும் செய்ய வேண்டியதில்லை. இசையின் இனிமையினால் நாமாகவே அதன்பால் ஈர்க்கப் படுகின்றோம். நம் மூச்சின் தாள லயத்தில் எந்தக் கவர்ச்சியும் இல்லை. ஆனால் நம்மை அது அமைதியாக்குகிறது. பலரும் அமைதியை நாடுகிறார்கள். ஆனால் அதை அனுபவிக்கும் போது ஏமாற்றம் அடைகிறார்கள். ஏதாவது தூண்டுதல் வேண்டுமென்றே விரும்புகிறார்கள். பொதுவாக மூச்சின் மீது நமக்கு விருப்போ வெறுப்போ இல்லை. அணபணாசதியின் போது மூச்சைக் கவனிக்கின்றோம். உள் மூச்சின் ஆரம்பத்தையும், அதன் இடை நிலையையும் அதன் முடிவையும் கவனிக்கின்றோம். அதன்பின்னர் வெளிமூச்சின் ஆரம்பத்தையும், அதன் இடை நிலையையும் அதன் முடிவையும் கவனிக்கின்றோம். மூச்சின் மிருதுவான தாள லயம் நம் எண்ணங்களின் வேகத்தைவிடக் குறைவாக இருப்பதால் நம்மை அமைதி நிலைக்குக் கொண்டு செல்கிறது. நம் மனதில் ஓடும் எண்ணங்களும் மறையத் தொடங்குகின்றன. ஆனால் நாம் எதையும் எதிர்பார்த்து இந்தத் தியானத்தில் ஈடுபடக்கூடாது. மனம் சாதரண மூச்சுடன் திருப்தியடையாமல், மேலும் ஏதேனும் அடைய வேண்டும் என்ற எண்ணத்துடன் இருக்கும் போது அதன் வேகம் குறையாமல், சாந்தமும் காணாமல் செயல் குலைந்து போய்விடுகிறது..
அணபணாசதியின்போது ஆரம்ப நிலையில் மனம் மூச்சின் மேல் வைக்கும் கவனம் அவ்வப்போது சிதறி விடுகிறது. கவனம் இழந்ததை அறிந்த பின் மீண்டும் மூச்சின் மீது கவனத்தைச் செலுத்த வேண்டும். எப்போதும் மீண்டும் ஆரம்பிக்கத் தயாராகவும், பொறுமையோடும் அணபணாசதியை அணுக வேண்டும். மனம் தன்னைக் கட்டுப்படுத்தும் எந்த முயற்சிக்கும் பழக்கப்படாததால் சற்று எதிர்ப்புத் தெரிவிக்கும். காட்டுக் குதிரையை முதலில் அடக்க முயற்சிக்கும் போது எப்படி ஆத்திரப்படுகிறதோ அது போலத்தான் மனமும்.
உள் மூச்சின் போது மனம் சுற்றத் துவங்கினால் அதைக் கட்டுப்படுத்தக் கடின முயற்சி எடுங்கள். வெளி மூச்சின் போது மனம் சிதறத் துவங்கினால் அதைக் கட்டுப்படுத்தவும் முயற்சி எடுங்கள். திரும்பத் திரும்ப மனத்தின் கவனத்தை மூச்சின் மேலேயே திருப்புங்கள். எப்போதும் புதிதாகத் துவங்கத் தயாராக இருங்கள். புதிய நாளின் துவக்கத்திலும் புதிய மூச்சின் துவக்கத்திலும் புதிதாகக் கற்கும் ஒருவருக்கு இருக்கும் ஆர்வத்தைப் போல உங்கள் ஆர்வத்தையும் வளர்த்துக் கொள்ளுங்கள். போகிப் பண்டிகையின் போது எப்படிப் பழையனவற்றை எரித்துக் களைந்து விடுகிறோமோ அது போலவே மனதில் எந்நேரமும் ஓடிக்கொண்டிருக்கும் பழைய எண்ணங்களையும் பிரச்சசனைகளையும் கைவிட்டு விடுங்கள்.
ஒரு உள்மூச்சின் போது மனம் அலைபாய ஆரம்பித்தால் திரும்பக் கவனத்தை மூச்சின் மேல் செலுத்துங்கள். இதுவே ஒரு கணம் கவனமாக இருப்பதன் அறிகுறி. ஒரு சிறந்த தாய் தன் குழந்தைக்கு எப்படிப் பயிற்சி கொடுப்பாளோ அது போலவே நாமும் நம் மனதிற்குப் பயிற்சி அளிக்கவேண்டும். விவரம் தெரியாத குழந்தை இங்கும் அங்கும் ஓடும். தாய் கோபப்பட்டு அதை அடித்து மிரட்டினால் குழந்தை பயந்து அலறி இன்னும் அதிகத் தொல்லை கொடுக்க ஆரம்பித்துவிடும். நல்ல தாயோ குழந்தையின் மேல் எப்போதும் ஒரு கண் வைத்துக் கொண்டு அது எங்காவது இடம் மாறிச் சென்றால் மீண்டும் குழந்தையை அது இருக்க வேண்டிய பாதுகாப்பான இடத்திற்கே கொண்டு வருவாள். அது போன்ற பொறுமை மூச்சுப் பயிற்சிக்கும் தேவை. நாம் நம்மையே கடிந்து கொள்ள வேண்டியதில்லை. அணபணாசதியோடு அமைதி காண முடியவில்லையென்பதற்காக நாம் மூச்சையும், மற்றவர்களையும் வெறுத்துத் துயரப்பட வேண்டியதுமில்லை.
சில நேரங்களில் நாம் எல்லாவற்றையும் கடுமையான நோக்குடன் காண்கிறோம். நகைச்சுவை உணர்வு இல்லாமல், மகிழ்ச்சியையும் குறைத்துக்கொண்டு, எல்லாவற்றையும் கட்டுப் படுத்தி அடக்கி விடுகிறோம். மனதில் மகிழ்வுண்டாக்குங்கள்! எதையாவது சாதிக்க வேண்டும் என்ற அழுத்தம் ஏதும் இல்லாமல், நிம்மதியாக இருக்கக் கற்றுக் கொள்ளுங்கள். குறிக்கோளை அடைய முடியவில்லை யென்றால் அது பெரிய இழப்பல்ல! இன்று உருப்படியாக என்ன செய்தீர்கள் என்று யாராவது கேட்டால் - ‘கவனத்தோடு ஒரு உள் மூச்சு விட்டேன்' என்று சொல்லுங்கள். இப்படி ஒரு மூச்சைக்கூடக் கவனிக்காமல் காலம் செலுத்துபவர்கள் தான் பலர்.
நாம் தீய சக்திகளுடன் போராடவில்லை. உங்களுக்கு அணபணாசதி மீது தயக்கமோ, வெறுப்போ உண்டானால் அதையும் கவனிக்கத் தவறாதீர்கள். நீங்கள் அணபணாசதி செய்தே ஆக வேண்டும் என்று எண்ண வேண்டி யதுமில்லை. ஆனால் அதைச் செய்வதை ஒரு மகிழ்ச்சி தரும் செயலாக எடுத்துக் கொள்ளுங்கள். 'அதைச் செய்ய முடியாது', என்று நீங்கள் நினைக்கும் போது அந்த எதிர்ப்பை, பயத்தை அல்லது விரக்தியை உணர்ந்து கொள்ள வேண்டும். சற்று ஓய்வெடுத்தபின் பயிற்சியை மீண்டும் தொடரலாம். இந்தப் பயிற்சியை ஒரு கடினமான செயலாகவோ, சுமையான பணியாகவோ கருதக் கூடாது.
நான் முதலில் துறவியான போது, ஒரு உலர்ந்த-பழைய குச்சி போல இருந்தேன், தீவிர மாகவும் கடுமையாகவும் இருப்பதில் பெருமிதம் கொண்டும் இருந்தேன். மேலும் எந்நேரமும் 'அதைச் செய்ய வேண்டும்.. இதைச் செய்ய வேண்டும்' என்று மனதில் ஒரு அவசரம் இருந்தது. அந்த நேரத்தில் நான் சமாதானத்தைச் சிந்திக்கக் கற்று கொண்டேன். சந்தேகம், அமைதியின்மை, அதிருப்தி மற்றும் வெறுப்பு - இவையெல்லாம் மனதில் எழுந்தன. விரைவில் அமைதி பற்றி எண்ணத் துவங்கி, அந்த வார்த்தையை இடையறாது சொன்னதன் மூலம் என்னால் அமைதி காண முடிந்தது. 'இந்தத் தியானத்தில் முன்னேறுவதாகத் தெரியவில்லையே” , 'அது தேவை இல்லை', 'நான் ஏதாவது பெற வேண்டும்' என்பது போன்ற சுய சந்தேகங்கள் வந்தும் என்னால் அமைதியாக இருக்க முடிந்தது. இதை நீங்களும் பயன்படுத்தலாம். எனவே நாம் பதட்டமாக இருக்கும் போது அணபணாசதி செய்யத் தொடங்குவதைவிட சற்று ஓய்வெடுத்தபின் மீண்டும் தொடங்கலாம்.
தொடக்கத்தில் நாம் நம்பிக்கையின்றித் தடுமாறக் கூடும் - நாம் வீணை வாசிக்கக் கற்கத் தொடங்குவது போலத்தான் இதுவும். நாம் முதலில் வாசிக்கத் தொடங்கும் போது, விரல்கள் தடுமாறுகின்றன. இதை நாம் எங்கே கற்கப் போகிறோம் என்ற ஐயமும் நமக்குள் எழுகிறது. ஆனால் சில நாட்கள் பயிற்சி பெற்ற பின் நம் திறமை வளர வளர வாசிப்பது மிகவும் எளிதாகி விடுகிறது. நாம் நம் மனத்தின் எண்ண ஓட்டங்களைக் கவனிக்க ஆரம்பிக்கிறோம். எனவே எப்போது நாம் அமைதியற்றோ, பதட்டமாகவோ அல்லது சுறுசுறுப்பின்றியோ இருக்கின்றோம் என்பதையும் நம்மால் அறிந்து கொள்ள முடிகிறது. நாம் அத்தகைய மன நிலைக்கு மாறுபட்டு இருக்கின்றோம் என்று நம்மையே நம்ப வைக்கும் முயற்சியில் நாம் ஈடுபட மாட்டோம். ஏனெனில் நாம் நம் மன உணர்ச்சிகளை முழுமையாகத் தெரிந்து இருக்கின்றோம். நாம் ஒரு உள்ளிழுக்கும் மூச்சைக் கவனிக்க முயற்சிக்கலாம். அது முடியாவிட்டால் குறைந்தது அரை உள்ளிழுக்கும் மூச்சைக் கவனிக்கவாவது முயற்சிக்கலாம். நாம் ஒரே முறையில் முழுவதையும் சரியாகச் செய்துவிட முயற்சிப்பதில்லை.
இப்படித் தான் இருக்கவேண்டுமென்று வரையறுத்துக் கொண்டு அதன்படியே ஒவ்வொன்றையும் சரியாகச் செய்ய வேண்டு மென்பதுமில்லை. அணபணாசதியை செய்யும்போது கூடவே எழும் பிரச்சினைகளையும் எதிர் கொண்டு செய்ய வேண்டும். மனம் அலைபாய்ந்து கொண்டிருக்கும் போது அது நாலாபுறத்திலும் சிதறி ஓடுவதை நுண்ணறிவால் புரிந்து கொள்ள வேண்டும் – அதுவே உள்ளுணர்வு. அப்படி இருக்க கூடாது என்று நினைத்து வருத்தப் பட்டாலோ நம்மை நாமே வெறுத்துக்கொண்டாலோ – அது நம் அறியாமையையே குறிக்கும்.
ஆரம்பத்தில் ஒரு கைதேர்ந்த யோகியைப் போல் நம்மால் தியானம் செய்ய முடியாது. யோகாசனம் கற்கும் போது எடுத்த எடுப்பில் B.K.S. அய்யங்காரைப் போல (ஹத யோக வல்லுனர்) உடலை வில்லாக வளைக்கத் தொடங்குவதில்லை. முதலில் குனிந்து பாதங்களைத் தொடக் கற்க வேண்டும். பிறகு கடினமான ஆசனங்களைக் கற்கத் தொடங்கலாம். எடுத்த உடன் கால்களைக் கழுத்தின் பின் சுற்றி வியக்கத்தக்க ஆசனங்களை அய்யங்கார் செய்வது போல நாம் செய்ய முற்பட்டால் நம்மை மருத்துவமனைக்குத் தூக்கிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டு விடும்! எனவே நம் உடலின் ஒத்துழைப்பிற்கு ஏற்ப மெல்ல மெல்ல உடலை வளைத்துப் பாதத்தைத் தொடுகிறோம். அணபணாசதி கற்பதும் அது போலத்தான். தற்போது இருக்கும் நிலையைப் புரிந்து கொண்டு அந்த நிலையிலிருந்து பயிற்சியைத் துவங்க வேண்டும். பின் கவனத்தைச் சற்று அதிகரிக்க முயற்சிக்கலாம். இதிலிருந்து ஒரு முகப் படுத்துதலென்றால் என்ன வென்று புரியத் தொடங்கும். சாதாரண மனிதர்களாகிய நாம் தேவர்களைப்போல மிகப் பெரிய திட்டங்களைத் தீட்டக்கூடாது. நம்மால் முடிக்க முடியும் என்று நாம் நினைக்கும் தீர்மானங்களையே எடுக்க வேண்டும். 'நான் இரவு முழுதும் உட்கார்ந்து என் மூச்சைக் கவனிக்கப் போகிறேன்' என்று தீர்மானித்து அது முடியா விட்டால் நமக்குக் கோபம் தான் வரும். நம்மால் முடிகிற அளவு நேரத்திற்கு மட்டும் திட்டமிடுங்கள். எப்படி முயற்சிப்பது, எப்படி ஊக்குவிப்பது, எப்போது ஓய்வெடுப்பது என்று புரிந்து கொள்ளும்வரை மனத்தளவில் ஆராய்ந்து செயலாற்றுங்கள்.
நடக்கப் பழகும் போது நாம் கீழே விழத்தான் செய்வோம்.. குழந்தைகளைப் பாருங்கள்: இதுவரை எடுத்த உடன் சீராக நடக்கத் தெரிந்த குழந்தையை நான் பார்த்ததே இல்லை. முதலில் தவழ்ந்து, பின் எதையாவது பிடித்துக்கொண்டு நின்று, விழுந்து மீண்டும் எழுந்து தான் குழந்தைகள் நடக்கக் கற்றுக் கொள்கின்றன. தியானமும் அது போலத்தான். அறியாமை எது என்று உணர்ந்தால்தான் அறிவைத் தெரிந்து கொள்ள முடியும். தவறிழைத்தால், அதைப் பற்றிச் சிந்தித்துத் தெளிந்தபின் மீண்டும் துவங்க வேண்டும். அதிகம் சிந்தித்தாலும் மனக் குழப்பம் தான் ஏற்படும். குழந்தைகள் தாங்கள் நடப்பதைப் பற்றி அதிகம் சிந்தித்தால் நடக்கக் கற்கவே மாட்டார்கள். ஒரு குழந்தை நடக்கத் துவங்குவதைப் பார்க்கும் போது நமக்கு அது கொஞ்ச நாளில் நடக்கும் என்ற நம்பிக்கையற்றுப் போய் விடுகிறதல்லவா? இப்படிக் கீழே விழுகிறதே இது எங்கே நடக்கப் போகிறது என்று நமக்குத் தோன்றும். தியானமும் அப்படித் தான். முதலில் நம்பிக்கையே இல்லாதது போலத் தான் இருக்கும். இருப்பினும் தொடர்ந்து செய்து கோண்டே இருக்க வேண்டும். முதலில் ஆர்வமும், ஆசிரியரும் அவர்தரும் அறிவுரைகளும் துணையாக இருப்பதால் உற்சாகமாக இருக்கும். ஆனால் இந்த ஆர்வமும் உற்சாகமும், ஆசிரியரும் கூட நிலையற்றவை தான். அதை மட்டும் நம்பி இருக்கக்கூடாது. அப்படி இருந்தால் ஏமாற்றம் தான் மிஞ்சும்.
எனவே உற்சாகமற்ற நேரத்தில் நாம் பயிற்சி செய்யக் கூடுதல் முயற்சி எடுத்துக் கொள்ள வேண்டும். அப்படி உற்சாகமில்லாத நிலையில் நாம் முயற்சியும் ஊக்கமும் உள்ளவராக மறு பிறப்பெடுக்க வேண்டும் என்று நினைக்கின்றோம். ஆனால் உள்ளுணர்வையும் நுண்ணறிவையும் வளர்க்க வேண்டுமெனில், உற்சாகமற்ற மந்தமான சோர்வான நிலைகளிலும் பொறுமையோடிருந்து சகித்துக் கொள்ளப் பழக வேண்டும். மனதின் அமைதியையும், வெறுமையையும் புரிந்துகொள்ள நாம் நடைமுறைப் பழக்க வழக்கங்களையே தொடர்வதை நிறுத்தி இந்தப் பொறுமையையும் சகிப்புத் தன்மையையும் வளர்த்துக் கொள்வது மிக அவசியம்.
'முயற்சியே செய்யாமல் இயல்பான முறையில் நடப்பது நடக்கட்டும்' என்று போதிக்கின்ற புத்தகங்களைப் படித்துவிட்டு நாம் சில சமயம் மந்த புத்திக்காரர்களாக மாறி விடுகிறோம். என் பயிற்சியின் போதுகூட அப்படி மந்தமான நிலை ஏற்படும் போது நான் உடலை நிமிர்த்து உட்கார முயற்சிப்பேன். நடப்பது நடக்கட்டும் என்று விட்டு விட்டால் எந்தப் பயனும் விளையாது. எனவே உடலை நேராக்கி, நெஞ்சை நிமிர்த்து உட்கார்ந்து என்னைச் சுறுசுறுப்பாக்கிக் கொள்வேன். அல்லது சிரசாசனம் போன்ற ஆசனங்களைச் செய்து என்னை ஊக்கப்படுத்திக் கொள்வேன். ஆரம்ப நாட்களில் என்னிடம் அபரிமிதமான சக்தி இல்லை என்றாலும் முயற்சிப்பதன் மூலம் தேவைப்படும் அளவுக்கு என்னைச் சுறுசுறுப்பாக்கிக் கொள்வேன். அதனால் சில நொடிகள் மட்டுமே நிமிர்ந்து உட்கார முடிந்ததென்றாலும் எதுவும் செய்யாமலிருப்பதற்கு இது மேலல்லவா?.
எப்போதும் தடங்களற்ற எளிதான வழிகளையே நாம் தேடிச் சென்றோமானால், நம் உள்ளம் விரும்புவதையே நாடிச் சென்றோ மானால் மனம் சிதறி, கவனம் குறைந்து, குழம்பிப் போய் விடும். தியானத்தில் ஈடுபடும்போது சிந்தனையில்லாமல் இருப்பதை விட சிந்தனையில் ஈடுபடுவதுதான் எளிது. இந்த வழக்கம் நமக்குப் பழகிப் போய் விட்ட ஒன்று. சிந்திக்கக் கூடாது' என்ற எண்ணமே ஒரு சிந்தனை தான். சிந்திக்காமல் இருக்க நாம் மனக் கவனத்தோடு இருக்க வேண்டும். மனதின் எண்ண ஓட்டங்களைப் பார்த்தும் கேட்டும் விழிப்போடு இருக்க வேண்டும். மனதைப் பற்றிச் சிந்திப்பதைவிட அதைக் கவனிக்க வேண்டும். எண்ணங்களில் மூழ்கி விடாமல் எண்ணங்கள் இருப்பதை உணர்ந்திருக்க வேண்டும். எண்ணங்கள் ஒரு ஓட்டம், ஒரு சக்தி. அது வந்து வந்து போகும். எப்போதும் மாறாத மனதின் நிலை அல்ல. எண்ண்ணத்தை எண்ணம் என்று தெரிந்து கொண்டு, அதை ஆராய்ச்சி செய்யாமலும் கணக்கிடாமலும் இருந்தால் படிப்படியாக அதன் வேகம் குறைந்து அடங்கி விடும். இது பூண்டோடு அழிக்கும் முயற்சி அல்ல. மனதில் எழும் எண்ணங்களைத் தானாக அடங்கிப்போக விட்டு விடும் ஒரு வழி தான். கருணை காட்டும் ஒரு செயல்தான். சரியற்ற பழக்கங்களால் ஏற்படும் அலைபாயும் எண்ணங்கள் குறையக் குறைய, நாமே அறியாத பரந்த இடம் உருவாகத் தொடங்குகிறது.
இயற்கையான மூச்சுடன் இணைந்து விடும் போது எல்லாமே வேகம் குறைந்து விடுகிறது. இதனால் கர்ம விளைவுகள் அமைதியாகின்றன. (உடலாலும், பேச்சாலும், அறிவோடும் நோக்கத்தோடும் செய்வதுதான் கர்மா. இந்த செய்கைகளுக்கு விளைவுகள் உள்ளன. ) இதைத்தான் ‘சமதா' - ஒரு அமைதியான நிலைக்கு வருவது- என்கிறோம். மனம் இலகுவாக வளைக்கத் தக்கதாக ஆகிறது. மூச்சும் மென்மையானதாகிறது.
அறிவு சிந்தனா சக்தி இயங்க நாம் விசாரணையில் ஈடுபட வேண்டும். இது தான் விபாஸனா - நம் மனதில் உள்ள அனுபவங்களின் இயற்கைக் குணங்களைப் பார்ப்பது - அந்த குணங்கள் என்னென்ன? அவை நிலையாமை (பாலி மொழியில் அனிக்கா), திருப்தியின்மை (துக்கா) , தான் இன்மை (அனத்தா அதாவது அனாத்மா, ஆத்மா இன்மை). இந்தக் கருத்துக்களை அப்படியே நம்ப வேண்டுமென்பதில்லை. கவனித்து உணர வேண்டும். மூச்சின் ஆரம்பத்தையும் முடிவையும் ஆராய்வோம். ஆரம்பம் எப்படி என்றும் முடிவு எப்படி என்றும் கவனமாகப் பார்ப்போம். ஆரம்பம் எப்படி என்றும் முடிவு எப்படி என்றும் கவனித்தால் போதும். உடல் தானாகவே மூச்சு விடுகிறது. உள் மூச்சு எடுப்பதால் அதன் விளைவாக வெளி மூச்சு எடுக்கிறோம். அதே போல வெளி மூச்சு எடுப்பதால் அதன் விளைவாக உள் மூச்சு எடுக்கிறோம். இதை நம்மால் மாற்ற முடியாது. இது நம் கையில் இல்லை. மூச்சு விடுவது இயற்கைக்குச் சொந்தம். நமக்கு இல்லை. ‘நாம்' என்று நினைப்பது நம் மூச்சு இல்லை. இதை உணரும் போது நாம் 'விபாசனா' செய்கிறோம்.
பௌத்த தியானம் நம்மை அடக்கமாக்குகிறது - அஜான் சா இதை மண் புழு அறிவு என்பார் – அது உங்களை அகந்தை உள்ளவராக்குவதில்லை, அது உங்களைச் சிகரத்தில் ஏற்றி விடுவதில்லை, அது உங்களை மிக உயர்ந்தவர் என எண்ண வைப்பதில்லை உங்களை எதையோ அடைந்து விட்டதாக நினைக்க வைப்பதில்லை. உலக வாழ்வில் இந்தப் பயிற்சியே முக்கியமற்றதாகவும் தேவை இல்லாததாகவும் தோன்றலாம். 'இன்று மாலை எட்டு மணிக்கு மதிப்புக்குரிய அஜான் சுமேதோ உள் மூச்சு விட்டார்!' என்று யாரும் தலைப்புச்செய்தியாகப் பத்திரிக்கையில் இதை எழுதப் போவதில்லை. ஒரு சிலருக்கு உலகப் பிரச்சனைகளை எப்படித் தீர்ப்பது என்றும், அல்லது ஏழை நாட்டு மக்களுக்கு எப்படி உதவுவது என்றும், உலகத்தை எப்படிச் சரி செய்வது என்றும் என்ணுவதே முக்கியமானதாகத் தோன்றலாம். இந்த பிரச்சனைகளோடு ஒப்பிட்டுப் பார்க்கும் போது நாம் மூச்சைக் கவனிப்பது முக்கியமற்ற செயலாகத் தோன்றக்கூடும். 'ஏன் மூச்சை கவனித்துக்கொண்டு நேரத்தை வீணாக்க வேண்டும்?'.என்று பலர் நினைக்கலாம். என்னிடம்கூட சிலர் வந்து 'எதற்காகத் துறவிகளாகிய நீங்கள் இப்படி உட்கார்ந்திருக்கின்றீர்கள்? மனிதர்களுக்குப் பயனளிக்குமாறு என்ன செய்தீர்கள்? நீங்கள் சுயநல வாதிகள். மற்றவர் உங்களுக்கு உணவளிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றீர்கள் ஆனால் நீங்கள் வேலையேதும் செய்யாமல் உங்கள் மூச்சை மட்டும் கவனித்துக் கொண்டிருக்கின்றீர்கள். உண்மையான உலகை விட்டு விலகி ஓடுகின்றீகள்.' என்று குறைப் பட்டிருக் கின்றார்கள்.
ஆனால், எது உண்மை உலகம்? யார் உண்மையில் உலகை விட்டு ஓடுகிறார்கள்? எதை விட்டு ஓடுகிறார்கள்? எதை எதிர் கொண்டு சந்திக்க வேண்டும்? சிந்தித்துப் பார்க்கும் போது அவர்கள் 'உண்மையான உலகம்' என்று நினைப்பது தாங்கள் நம்பும் உலகத்தை அல்லது தங்களுக்குத் தெரிந்த பழக்கப்பட்ட உலகத்தைத்தான். ஆனால் அந்த உலகம் மனதின் ஒரு நிலை தான். தியானம் உண்மை உலகை எதிர்த்து நிற்கும் செயல். எது உண்மையான உலகமோ அதை ஏற்றுக்கொண்டு அதனுடன் ஒத்துப் போகும் செயல்.
அந்த உண்மை உலகமும் நம் மூச்சு எப்படி தோன்றி மறைகிறதோ அதே மாதிரி தான் தோன்றி மறைகிறது. நாம் இயற்கையின் போக்கைப்பற்றி சித்தாந்திக்கவில்லை, அல்லது மற்றவரின் தத்துவக் கருத்துக்களை எடுத்து அதன் படி நம் எண்ணங்களை மாற்றிக்கொள்ளும் முயற்சியும் இல்லை. நம் மூச்சைக் கவனிக்கும் போது நாம் உண்மையில் இயற்கையின் இயல்பைக் கவனிக்கின்றோம். மூச்சின் இயல்பை கவனிப்பதென்பது நிபந்தனையின் மூலம் உணர்கிற எல்லாப் பொருட்களின் இயல்பைக் கவனிக்கின்றோம். அப்படி உள்ள பொருட்கள் அளவற்றவை. நாம் உணரும் பொருட்களை எல்லாம் கவனிப்பதென்பது முடியாத காரியம், சமாளிக்கக் கூடிய செயலுமல்ல. எனவே எளிமையிலிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டும்.
எனவே அமைதியான மனதோடு காலசக்கரத்தின் பாங்கினை அறிகிறோம் - தோன்றுவதெல்லாம் மறைகிறதென்பதை அறிகின்றோம். இந்த காலச் சக்கரத்தை 'சம்சாரா' என்று பாலி மொழியில் சொல்வார்கள் - பிறப்பும் இறப்பும் அடங்கிய சக்கரம். மூச்சு விடுவதிலும் இந்த சம்சார காலச் சக்கரத்தைக் கவனிக்கலாம். உள் மூச்சு விட்ட பிறகு வெளி மூச்சு விடுகிறோம். உள் மூச்சோ வெளி மூச்சோ மட்டும் விட முடியாது. ஏனென்றால் ஒன்றின் காரணமாகத்தான் மற்றது பிறக்கிறது. 'எனக்கு உள் மூசு மட்டும் தான் விட விருப்பம். வெளி மூச்சு விடுவதை தவிர்க்கப் போகிறேன். எனது வாழ்வு ஒரு நீண்ட உள் மூச்சாகட்டும்' என்று சொல்வது கேலிக்கிடமளிக்கும் அல்லவா? அப்படி நான் சொல்வேனானால் என்னை பைத்தியக்காரன் என்பீர்கள். இருந்தும் .அப்படித்தான் பெரும்பாலோர் வாழ்கிறார்கள்.
கிளர்ச்சி, இன்பம், இளமை, அழகு மற்றும் உற்சாகம் போன்றவற்றுடன் மட்டுமே ஒட்டிக்கொள்ள மக்கள் விரும்புவது முட்டாள்தனமல்லவா?. 'எனக்கு அழகான பொருட்கள் மட்டுமே வேண்டும். அறுவறுக்கத்தக்க பொருட்களுடன் தொடர்புகொள்ள விரும்பவில்லை. எனக்கு இன்பமும் மகிழ்ச்சியும் மற்றும் படைப்பாற்றல் சக்தியும் வேண்டும். ஆனால் மனதில் சலிப்போ மனச்சோர்வோ இருக்க விரும்பவில்லை.' என்று சொல்வது 'என்னால் உள் மூச்சு விடுவதைச் சகித்துக் கொள்ள முடியவில்லை. இனிமேல் உள் மூச்சே விடப் போவதில்லை' என்று நான் சொல்வது போன்ற மடத்தனமான எண்ணம் தான். அழகு, சிற்றின்பங்கள் மற்றும் காதல் போன்றவைகள் எப்போதும் மனச்சஞ்சலத்தையே ஏற்படுத்துவதை நாம் உணரும் போது நம் மனப்போக்கு பற்றற்ற நிலையை எய்துகிறது.. ஒரு பொருள் மீதான பற்றை அறுப்பது அந்தப் பொருளை நாசமாக்குவதோ அழிப்பதோ என்பதல்ல. அதை அதன் வழியே போக விடுவது தான், அதன் மீதான பிணைப்பை விடுவதுதான். நாம் காலச்சக்கரத்தின் எதாவது ஒரு பகுதியில் மட்டும் முழுமையையும் பிழையின்மையையும் தேட முயற்சிப்பதில்லை; மாறாக அந்த முழுமை காலச்சக்கரம் முழுதும் - முதுமை, பிணி, மரணம் அனைத்திலும் - இருப்பதைக் காண்கின்றோம். பிறப்பில்லாத மரணமில்லாத ஓர் இடத்திலிருந்து தோன்றி, முற்றாக வளர்ச்சி பெற்று, பின் அதே உருவாக்கப்படாத இடத்திற்குத் திரும்புவதுதான் முழுமை.
'சங்கார'ங்கள் (காரணத்தோடு தோன்றுபவை) அனைத்தும் தோன்றி மறையும் இயல்பு கொண்டுள்ளன என்பதைக் காணத் தொடங்கும்போது நிபந்தனையற்ற மனதின் அமைதியின் மீது, அதன் நிசப்தத்தை நோக்கித் திரும்புகிறோம். நாம் 'சுன்யாடா' அதாவது வெறுமையை அனுபவிக்கத் தொடங்குகின்றோம். இந்த வெறுமை என்பது மறதி இல்லை. இல்லாமையும் இல்லை. தெளிவான முற்றாக உணரக்கூடிய ஒரு அமைதி.
நிபந்தனையுள்ளதும், நிபந்தனையற்றதும், விழிப்புள்ளதும் இருக்கின்றன. விழிப்புள்ளது என்ன? நம் நினைவா? உணர்வா? விழிப்புள்ளதுதான் 'நான்' என்பதா? என்னால் இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை. என்றாலும் நான் அறியக் கூடும். பௌத்த தியானத்தில் நாம் அந்த விழிப்புள்ளதுடன் இருக்கவேண்டும். அறிந்து, கண்விழித்திருந்து, நிகழ் காலத்தில் இருந்து தெரிந்திருக்க வேண்டும் - தோன்றுவதெல்லாம் மறைந்துவிடுகிறது. தோன்றுவது எதுவாகவும் 'நான்' இல்லை.
நிபந்தனையுள்ளதற்கும், நிபந்தனையற்றதற்கும் இந்த விழிப்புத் தன்மையை மனதில் ஈடுபடுத்த வேண்டும். தப்பிக்க முயலாமல் விழிப்புடன் இருப்பது ஒரு மிகவும் சிறந்த மன நிலை. சாதாரண நிலைகளில் விழிப்புடன் இருக்கலாம். அதாவது நம் உடம்பின் நான்கு நிலைகளிலும் - உட்காரும் போதும், நிற்கும் போதும், நடக்கும் போதும், படுத்திருக்கும் போதும் - விழிப்புடன் இருக்கலாம். தலை கீழாக நிற்கவோ கரணம் அடிக்கவோ தேவையில்லை. இந்த நான்கு உடல் நிலைகளையும் சாதாரண மூச்சையும் வைத்து மிகச்சாதாரண ஒன்றின் அருகே நகர்கிறோம் - அது தான் நிபந்தனை யற்ற ஒரு இடம். நிபந்தனை யுள்ளவை அசாதாரணமானவை. ஆனால் மன அமைதியோ, நிபந்தனையற்றது, மிகச் சாதாரணமானது. அதை நாம் கவனிப்பதுகூட இல்லை - அவ்வளவு சாதாரணமானது. எந்நேரமும் உங்களுடன் இருந்தும் அதைக் கவனிப்பதில்லை. ஏனெனில் நாம் எப்போதும் மர்மமானவற்றையும் உவகையூட்டுவதையும் நாடியே செல்கிறோம். தோன்றி மறையும் பொருட்களுடன் பற்றுக் கொள்கிறோம் ஆனால். இவை நம்மைத் தூண்டி விட்டு ஊக்கமற்ற நிலைக்குக் கொண்டு வந்துவிடுகின்றன. உலக நடவடிக்கை இப்படித்தான் இருக்கும் என்று நினைத்து அதில் சிக்கிக் கொள்கிறோம். இப்போது தியானத்தின் மூலம் அமைதியைக் கண்டு விழிப்புடன் இருந்து அதே நடவடிக்கைகளின் உண்மை இயல்புகளைப் புரிந்துகொண்டுள்ளதால் நாம் ஏமாற்றம் அடைவதில்லை.
'சம்சார' சக்கரத்தை அறிந்து கொள்வதுதான் 'நிப்பானா'விற்கான நிபந்தனை. நமது பழக்கங்களைப் புரிந்து கொண்டுள்ளதால் பழக்கங்களும் அவைகளின் குணங்களும் நம்மை ஏமாற்றுவதில்லை. நாம் தெளிவாகக் காண வேண்டியது இரண்டு மட்டுமே - நிபந்தனையுள்ளதையும் , நிபந்தனையற்றதையும் தான். பற்றோ பிடிப்போ இல்லாமல் நிகழ்காலத்தில் நடப்பதை உணரவேண்டும். இந்தக் கனத்தில் மனதின் நிலையையும், உடலின் உணர்ச்சிகளையும், கேட்பதையும் பார்ப்பதையும் ரசிப்பதையும், தொடுவதையும், முகர்வதையும், நினைப்பதையும் மனதின் நிசப்தத்தையும் உணரவேண்டும்.
எனவே புத்தரின் போதனை நேரடியான ஒன்று. ஞானம் பெருவதற்காக நாம் பயிற்சி செய்யவில்லை. இந்த நேரத்தில் விழிப்புடன் இருப்பதுதான் (ஞானம் தானாக வரும்).
முற்றும்
No comments:
Post a Comment